இந்தியா

ஆட்சியமைக்க உரிமை கோரும் எடியூரப்பா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published

on

கர்நாடகாவில் கடந்த 17 நாட்களாக நிலவி வந்த குழப்பமான அரசியல் சூழல் முடிவுக்கு வந்துள்ளது. பலநாட்களாக இழுத்தடித்து வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு ஒருவழியாக நடந்து முடிந்ததில் குமாரசாமி அரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கர்நாடக அரசு கவிழ்ந்துள்ளது. அடுத்ததாக ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார் எடியூரப்பா.

கடந்த சில தினங்களாக கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமல் இழுத்தடித்து வந்த குமாரசாமி அரசு ஒருவழியாக நேற்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது. அதில் மொத்தம் பதிவாகிய 204 வாக்குகளில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. இதனால் குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து கர்நாடக அரசு கவிழ்ந்தது.

குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் 6 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததையடுத்து குமாரசாமி ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதனையடுத்து அடுத்த அரசு பதவியேற்கும் வரை முதலமைச்சராக தொடரும்படி குமாரசாமிக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் அடுத்த முதல்வராக பாஜகவின் எடியூரப்பா பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. விரைவில் ஆட்சியமைக்க உரிமை கோருவோம் என பாஜக மூத்த தலைவர் முரளிதர ராவ் தெரிவித்திருந்த நிலையில் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஆளுநர் வஜுபாய் வாலாவை நேரில் சந்தித்து எடியூரப்பா ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version