கிரிக்கெட்

மகளிர் டி-20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி!

Published

on

ஐசிசி மகளிர் இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் தென்னாப்பிரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பெண்கள் அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை நேற்று எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

#image_title

கேப்டவுனில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது, ஆரம்பம் முதலே பாகிஸ்தான் அணிக்கு விக்கெட் வீழ்ச்சி தொடங்கியது. அந்த அணி 13 ஓவர்களில் 68 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் மூன்றாவதாக களமிறங்கிய பிஸ்மா மரூஃபும், ஆறாவதாக களமிறங்கிய ஆயிஷா நசீமும் பொறுப்பாக விளையாடி பாகிஸ்தான் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

இறுதியாக 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய பிஸ்மா 55 பந்துகளில் 68 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிரடியாக விளையாடிய ஆயிஷா நசீம் 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து இந்திய அணி 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கியது. இந்திய சார்பில் களமிறங்கிய அனைத்து வீரங்கனைகளும் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 150 ரன்கள் இலக்கை இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு எட்டியது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜெர்மிமா 53 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷஃபாலி வர்மா 33 ரன்களும், ரிச்சா கோஷ் 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சிறப்பாக விளையாடிய ஜெர்மிமா ஆட்டநாயகி விருது பெற்றார்.

Trending

Exit mobile version