தமிழ்நாடு

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவனை கொன்ற வீரமங்கை – விடுதலை செய்து போலீஸ் அதிரடி!

Published

on

சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை கத்தியால் குத்திக் கொன்றுள்ளார் இளம் பெண் ஒருவர். இதை கொலை வழக்காக கருதாமல், தற்காப்புக்காகவே இளம் பெண் கொலை செய்துள்ளார் என்று கருதி, அவரை விடுதலை செய்து தமிழக காவல் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகள் தெரிவித்து வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரத்தில் உள்ள அல்லிமேடு பகுதியில் வசித்து வருகிறார் இளம் பெண் கவுதமி. தாய் மற்றும் தந்தையை இழந்த கவுதமி, உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். அவர் சம்பவ நாளன்று இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக, ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருக்கும் இடத்துக்கு ஒதுங்கியுள்ளார். அப்போது குடி போதையில் இருந்த அஜித் என்பவர், கவுதமியை பின் தொடர்ந்து வந்துள்ளார்.

போதையில் இருந்த அஜித், கவுதமியின் உறவினர் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் கவுதமிக்கு அருகில் கத்தியுடன் வந்துள்ளார் அஜித். கத்தி முனையில் கவுதமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றுள்ளார் அஜித். அவரிடமிருந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்று கவுதமி முயன்றுள்ளார். ஒரு கட்டத்தில் அஜித்தின் கையிலிருந்த கத்தியைப் பிடிங்கி, அவரையே தற்காப்புக்காக குத்தியுள்ளார் கவுதமி. குடி போதையிலிருந்த அஜித், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். ரத்த வெள்ளத்தில் அஜித் விழுந்து கிடக்க, அங்கிருந்து தப்பித்துள்ளார் கவுதமி.

இதையடுத்து, அருகில் இருக்கும் சோழவரம் காவல் நிலையத்துக்கு கத்தியுடன் சென்று சரணடைந்துள்ளார் கவுதமி. முதலில் இதை கொலை வழக்காக கருதி, ஐபிசி பிரிவு 302க்கு கீழ் வழக்குப் பதிவு செய்தது காவல் துறை. ஆனால், இந்த விஷயம் திருவள்ளூர் மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அவர் கவுதமியிடம் சம்பவம் குறித்து தீர விசாரித்துள்ளார். இதைத் தொடர்ந்து, கவுதமி தற்காப்புக்காத்தான் அஜித்தைக் குத்திக் கொன்றுள்ளார் என்பதை புரிந்து கொண்டார். மேலும், 302 செக்‌ஷனிலிருந்து, தற்காப்புக்காக கொலை செய்தால் பதிவு செய்யப்படும் ஐபிசி செக்‌ஷன் 100-க்கு கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் கவுதமி உடனடியாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

காவல் துறையின் இந்த செயலுக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் காவல் கண்காணிப்பாளர் அரவிந்துனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பாலியல் துன்புறுத்தல்களால் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படும் சூழலில், தன்னை சீண்டிய நபரை தற்காப்புக்காக குத்திக் கொன்ற கவுதமியின் வீரத்தையும் பலர் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

பெண்கள், பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டால் இப்படித்தான் எதிர்வினையாற்ற வேண்டும் என்பதை கவுதமி முன்னுதாரணமாக இருந்து விளக்கி உள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version