உலகம்

பெண் பத்திரிகையாளர்கள் அனைவரும் பணிநீக்கம்: தாலிபான்களின் முதல் நடவடிக்கை!

Published

on

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக தாலிபான் படைக்கும் அரசு படைக்கும் போர் நடந்து வந்த நிலையில் சமீபத்தில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி உள்ளனர். இதனை அடுத்து அந்நாட்டின் அதிபர் அஸ்ரப் கானி நாட்டைவிட்டு வெளியேறி ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளதாகவும் குறிப்பாக பெண்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் பெண்கள் படிக்கவும், வேலைக்கு செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஊடகத்தில் பணிபுரியும் அனைத்து பெண் பத்திரிகையாளர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்றும் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படாது என்று தாலிபான்கள் வாக்குறுதி கொடுத்த நிலையில் தாலிபான்களின் முதல் நடவடிக்கையே பெண் செய்தியாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பாளர்கள் அனைவரையும் பணிக்கு செல்ல வேண்டாம் என்று தடுத்து வருவதாகவும் மீறி பணிக்குச் செல்லும் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

வேலை இழந்த வேலை இழந்த பெண் செய்தியாளர் ஒருவர் இதுகுறித்து கூறிய போது தாலிபான்கள் கடந்த 20 ஆண்டுகளாக திருந்தவே இல்லை என்றும், அதே போல்தான் இருக்கிறார்கள் எங்களுடைய உரிமை மறுக்கப்படுகிறது என்றும், அடையாள அட்டையை காட்டியும் எங்களை பணிபுரிய அனுமதிக்கவில்லை என்றும் இது அநியாயமானது என்று பெண் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் பெண் செய்தி வாசிப்பாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version