இந்தியா

ஃபேஸ்புக் நண்பரிடம் ரூ.86 லட்சத்தை இழந்த பெண்: நூதன முறையில் திருட்டு!

Published

on

மும்பையை சேர்ந்த வட்சலா என்ற 50 வயதான பெண் ஒருவர் தனது மகனின் எதிர்காலத்திற்காக சிறிது சிறிதாக சேர்த்து வைத்த 86 லட்சம் ரூபாயை ஃபேஸ்புக் நண்பரிடம் முதலீடு செய்து ஏமாந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

#image_title

வட்சலாவின் ஒரே மகன் வெளிநாட்டில் ஏர்லைன்சில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தனியாக இருந்த வட்சலாவுக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு பேட்ரிக் ஜார்ஜ் என்ற நபரிடம் இருந்து நட்பு கோரிக்கை ஒன்று வந்துள்ளது. அந்த நபர் தன்னை வெளிநாட்டு முதலீட்டாளர் என்றும், முதலீட்டு ஆலோசகர் என்றும் அறிமுகப்படுத்தியதையடுத்து அவரது நட்பு கோரிக்கையை ஏற்று அவருடன் உரையாடி வந்துள்ளார்.

இதனையடுத்து பேட்ரிக் ஜார்ஜ் தன்னிடம் பல முதலீட்டு திட்டங்கள் இருப்பதாகவும், அதில் முதலீடு செய்தால் தங்களுக்கு அதிக பணம் லாபம் கிடைக்கும் என்றும் ஆசையை தூண்டியுள்ளார். பேட்ரிக் ஜார்ஜின் ஆசை வார்த்தைகளை நம்பி தனது ஒரே மகனின் எதிர்கால நலனுக்காக அவர் கூறிய வங்கி கணக்குகளில் பணத்தை டெப்பாசிட் செய்துள்ளார் வட்சலா. 2017 முதல் 5 ஆண்டுகளில் 55 முறை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பேட்ரிக் ஜார்ஜின் அறிவுறுத்தலின் பேரில் ரூபார் 86 லட்சத்தை முதலீடு செய்துள்ளார் அவர்.

இந்நிலையில் சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பிய வட்சலாவின் மகன் தனது தாயின் மொபைல் ஃபோனை சோதனை செய்தபோது அவர் முதலீடு செய்த விவரம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சந்தேகமடைந்த மகன் தனது தாயிடம் விசாரித்தார். பின்னர் அதில் ஒரு முதலீட்டை திரும்ப கொடுக்கும்படி அந்த நபரிடம் கேட்க அறிவுறுத்தியுள்ளார். உடனே வட்சலா தனது ஃபேஸ்புக் நண்பர் பேட்ரிக் ஜார்ஜிடம் ஒரு முதலீட்டை திரும்ப கொடுக்கும்படி கேட்டுள்ளார். உடனே அந்த நபர் வட்சலா உடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்துள்ளார்.

ஃபேஸ்புக்கில் தனது தொடர்புகளை அந்த நபர் துண்டித்த பின்னர் தான் வட்சலாவுக்கு தான் ஏமாற்றப்பட்டோம் என்பது புரிந்திருக்கிறது. இதனையடுத்து அந்த பெண் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தார். இதனை போலீசார் வழக்கு பதிவு செய்து சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றியுள்ளனர். வட்சலா டெப்பாசிட் செய்த அனைத்து வங்கிக்கணக்குகளும் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version