தமிழ்நாடு

“பழனிசாமியை மக்கள் நம்புவார்களா?”- மு.க.ஸ்டாலினின் அடுக்கடுக்கான கேள்வி

Published

on

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த பழனிசாமி, சிறுபான்மையினரின் பாதுகாவலர் போல் நாடகம் நடத்தி, சி.ஏ.ஏ சட்டத்தை நீக்க வலியுறுத்துவோம் என்பதை மக்கள் நம்புவார்களா?” என்றுள்ளார்.

‘சிறுபான்மையினரின் பாதுகாவலர் நாங்கள்தான் என்று ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் அதிமுகவினர். அதுமட்டுமல்ல, குடியுரிமைத் திருத்தச் சட்டம் – சிஏஏ நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்தபோது, அதற்கு ஆதரவு தெரிவித்தவர்கள்தான் அ.தி.மு.க.வினர். ஆனால் இப்போது தேர்தல் அறிக்கையில், அந்தச் சட்டத்தை நீக்குவதற்கு நாங்கள் வலியுறுத்துவோம், வற்புறுத்துவோம் என்று தேர்தலில் மக்களை ஏமாற்றுவதற்காகச் சொல்லி இருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய நாடகம் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மாநிலங்களவையில் அ.தி.மு.க. – பா.ம.க. உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதை எதிர்த்து வாக்களித்து இருந்தால் அந்த சட்டமே நிறைவேறி இருக்காது. மாநிலங்களவையில் அந்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க. எம்.பி.க்கள், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், என்.சந்திரசேகரன், முகமது ஜான், ஏ.கே.முத்துக்கருப்பன், ஏ.நவநீதகிருஷ்ணன், ஆர்.சசிகலா புஷ்பா, ஏ.கே.செல்வராஜ், ஆர்.வைத்திலிங்கம், ஏ.விஜயகுமார், விஜிலா சத்யானந்த் என்ற பத்து பேர். ஒரே ஒரு பா.ம.க. எம்.பி. அன்புமணி ராமதாஸ்.

இந்த பதினோரு பேரும் மத்திய அரசு கொண்டு வந்த சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தினால் இந்தச் சட்டம் நிறைவேறிவிட்டது. தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் அதை எதிர்த்து வாக்களித்தார்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மாநிலங்களவையில் ஆதரித்தவர்கள் 125 பேர். அதை எதிர்த்தவர்கள் 105 பேர். இந்த அ.தி.மு.க. – பா.ம.க.வை சேர்ந்த பதினோரு பேரும் எதிர்த்து வாக்களித்திருந்தால் இந்தச் சட்டமே நிறைவேறி இருக்காது.

இன்று நாடு முழுவதும் சிறுபான்மையினர் துன்பப்படுவதற்குக் காரணம் இந்த அ.தி.மு.க.வும் பா.ம.க.வும் என்பதைப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன். எனவே பழனிசாமியும் மருத்துவர் அய்யாவும் தான் இந்த சட்டம் நிறைவேறுவதற்கு காரணமாக இருந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது தேர்தலுக்காக நாடகம் போடுகிறார்கள். அவ்வாறு நாடகம் போடும் அவர்களை நீங்கள் நம்புகிறீர்களா?’ எனத் தேர்தல் பரப்புரையின் போது கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்டாலின்.

seithichurul

Trending

Exit mobile version