தமிழ்நாடு

‘ஆமாங்க… சசிகலாவை விமர்சிக்கமாட்டேங்க..!’- யூ-டர்ன் அடித்த எடப்பாடி பழனிசாமி

Published

on

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை முடித்து வெளியே வந்துள்ள சசிகலா பற்றி விமர்சிக்க மாட்டேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரபரப்புக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசினார். குறிப்பாக சசிகலா தொடர்பான கேள்விகளுக்கு ஆரம்பம் முதலே மழுப்பல் தொனியில் பதில் கூறி வந்தார் முதல்வர்.

‘அதிமுக என்பது மாபெரும் இயக்கம். இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது. சசிகலா தீவிர அரசியலில் ஈடுபட இருக்கிறேன் என்று சொன்னால், அது குறித்து அவரிடம் தான் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க வேண்டும். இது ஜனநாயக நாடு. இந்த நாட்டில் யார் வேண்டுமானும், அவர்களுக்குப் பிடித்ததைச் செய்யலாம். அதற்கெல்லாம் நாம் எப்படி முட்டுக்கட்டை போடுவது’ என்று நிருபர்கள் சந்திப்பில் ஆரம்பத்திலேயே கூறிய பழனிசாமி தொடர்ந்து,

‘சசிகலா குறித்து எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை முன்னரே அறிவித்து விட்டோம். அதில் எந்த மாற்றங்களுக்கும் இடமில்லை’ என்றார்.

இதையடுத்து ஒரு நிருபர், ‘சார், நீங்க எப்பவும் டிடிவி தினகரனை மட்டும் அதிகமாக விமர்ச்சிக்கிறீங்க. சசிகலா பற்றி பேச மறுக்கிறீங்களே?’ எனக் கேட்டதற்கு,

‘உண்மை தான். தினகரன் தான் எங்கள் கட்சியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்களை பிரித்து அழைத்துச் சென்றவர். அவர் தான் இந்த ஆட்சிக் கவிழ வேண்டும் என்று செயல்பட்டவர். அவர் தான் தற்போது அமமுக என்னும் கட்சியை ஆரம்பித்து அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அப்படி இருக்கையில் அவரைத் தான் விமர்சிக்க முடியும்’ என்று பளீச் பதிலைக் கொடுத்தார்.

டிடிவி தினகரன் மீண்டும் கட்சியில் இணைக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு முதல்வர் பழனிசாமி, ‘அமமுகவில் இருந்து யாராவது தனியாக பிரிந்து மீண்டும் அதிமுகவில் இணைய விரும்பினால், அது குறித்து எங்கள் கட்சித் தலைமை முடிவெடுக்கும்’ என்று சூசகமாக கூறினார்.

நேற்று ஒரு மர்ம நபரால் சென்னை மற்றும் சேலத்தில் இருக்கும் முதல்வர் பழனிசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. மர்ம நபர் ஒருவரால் விடப்பட்ட இந்த வெடிகுண்டு மிரட்டலால் முதல்வருக்கும் அவரது வீட்டுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து கேட்ட போது அவர், ‘நான் எந்த மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் பயந்தவன் அல்ல. எதையும் சந்திக்கத் தயாராகவே இருக்கிறேன்’ என்று அதிரடியாக தெரிவித்தார்.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version