தமிழ்நாடு
தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா..?- கல்வி அமைச்சர் பதில்
மருத்துவப் படிப்புகளுக்கு எழுதப்படும் நீட் நுழைவுத் தேர்வு திமுக ஆட்சியில் ரத்து செய்யப்படுமா என்கிற கேள்விக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.
கடந்த 7 ஆம் தேதி, திமுக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. அன்று முதல் முறையாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் பொறுப்பு ஏற்றார். திமுக, எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் இருந்தே நீட் தேர்வை எதிர்த்து வந்தது.
தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படக் கூடாது என்றும், தங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது. மேலும் தேர்தல் பிரச்சாரங்களின் போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நீட் தேர்வின் நிலை என்னவாகும் என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ‘தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால் மாணவர்களுக்கு ஆன்லைனில் எப்படி பாடம் சொல்லிக் கொடுப்பது, பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்து தான் கவனம் செலுத்தி வருகிறோம்.
விரைவில் நீட் தேர்வு குறித்து விவாதித்து உரிய முடிவை அறிவிப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.