தமிழ்நாடு

தமிழகத்திலிருந்து எம்பி ஆகிறாரா மன்மோகன் சிங்? கே.எஸ்.அழகிரி பதில்!

Published

on

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகாலம் முடிவடைய உள்ளதால் அவர் மீண்டும் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலளித்துள்ளார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு அசாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பதவிக் காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. அசாம் மாநிலத்தில் காங்கிரஸுக்கு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்கக் கூடிய அளவுக்கு எம்எல்ஏக்களின் பலம் இல்லாததால், தமிழகத்திலிருந்து அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது.

தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட 6 பேரின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதில் திமுக மூன்று உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும். திமுக சார்பாக ஏற்கனவே மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட்டுவிட்டதால், மீதமுள்ள 2 இடங்களில் திமுக காங்கிரஸுக்கு ஒரு இடத்தை ஒதுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரியிடம், மன்மோகன் சிங் தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட வாய்ப்பிருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், இதுகுறித்து காங்கிரஸ், திமுக தலைவர்கள் கூடிப் பேசி முடிவு செய்வார்கள்.

மன்மோகன் சிங் மிகப்பெரிய தலைவர். மாபெரும் அறிஞர். அவர் தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகிறார் என்று சொன்னால் அதனை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். திமுக தலைவரும் அதனை வரவேற்பார். ஆனால், அவர் போட்டியிடுவாரா என்று சொல்லக்கூடிய நிலையில் நான் இல்லை. எனக்கு அந்தத் தகுதியும் இல்லை என கூறினார்.

seithichurul

Trending

Exit mobile version