தமிழ்நாடு

திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதை பரிசீலிபோபம் – திருமா சூசகம்!

Published

on

தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில்’ விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்தக் கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலின் போதும் தொடரும் எனத் தெரிகிறது.

அதே நேரத்தில் கடந்த சில வாரங்களாக கூட்டணியில் ஒரு சலசலப்பு நிலவி வருகிறது. அதற்கு காரணம் விசிகவின் தலைவர் தொல்.திருமாவளவன், ‘சட்டமன்றத் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டி’ என்று அறிவித்தது தான். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது விசிக, இரண்டு தொகுகளில் போட்டியிட்டது. விழுப்புரம் தொகுதியில் திமுகவின் ‘உதய சூரியன்’ சின்னத்திலும், சிதம்பரம் தொகுதியில் தனிச் சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றது விசிக.

இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் தாங்கள் போட்டியிட உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் தனிச் சின்னத்தில் தான் போட்டி என்கிற நிலைப்பாட்டில் விசிக உறுதியாக உள்ளது. அதே நேரத்தில் திமுக தலைமை, விசிகவை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

இது குறித்து தற்போது பேசியுள்ள திருமாவளவன், ‘விசிகவின் தனித் தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், எங்கள் மாண்பிற்கு களங்கம் ஏற்படாத வகையிலும், எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து நாங்கள் முடிவெடுப்போம்.

பதிவு செய்யப்பட்ட, அதே நேரத்தில் அங்கீகரிக்கப்படாத கட்சிகளைப் பொறுத்தவரை, தேர்தலுக்கு 15 நாட்களுக்கு முன்னர் தான் சின்னம் ஒதுக்கப்படும். இதனால் திமுக கூட்டணியின் வெற்றி பாதிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைமை கருதலாம். அதனால், அவர்கள் எங்களுக்கு, உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடுங்கள் என்று அறிவுரை வழங்குகிறார்கள்.

இதனை நாங்கள் வற்புறுத்தலாக பார்க்கவில்லை. திமுகவின் அறிவுரை குறித்து நாங்கள் பரிசீலித்து முடிவெடுப்போம்’ என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

Trending

Exit mobile version