சினிமா செய்திகள்

தலைமை அனுமதி கொடுத்தும் போட்டியிட ஆள் இல்லை: விஜய் ரசிகர்கள் மத்தியில் குழப்பம்!

Published

on

வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விஜய் ரசிகர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அனுமதி அளித்துள்ளது என்ற செய்தி வந்த நிலையில் தற்போது போட்டியிட பல ரசிகர்கள் முன்வரவில்லை என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊராட்சி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இந்த தேர்தலில் போட்டியிட அதிமுக, திமுக உள்பட பல கட்சிகள் பரபரப்புடன் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திடீர் திருப்பமாக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் போட்டியிட தலைமை அனுமதி அளித்தது.

மேலும் போட்டியிடும் வேட்பாளர்கள் விஜய்யின் புகைப்படம் மற்றும் மன்றத்தின் கொடியை பயன்படுத்தலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதே நேரத்தில் ஒரு சில இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட ஆர்வம் காட்டிய போதிலும் பெரும்பாலான பகுதிகளில் போட்டியிட ஆளில்லை என்ற தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட பெரிய அளவில் பணம் மற்றும் உள்ளூர் செல்வாக்கு தேவை என்பதால் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட தயங்குகின்றனர் என்றும் குறிப்பிடத்தக்கது. பேரூராட்சி தலைவர் பதவிக்கு இப்படி என்றால் ஒன்றிய தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் நிலைமையை சொல்லி தெரியவேண்டியதில்லை. எனவே தற்போது வந்துள்ள தகவலின்படி சில வார்டுகளில் மட்டுமே விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற தொகுதிகளில் போட்டியிட ஆள் இல்லையா அல்லது விஜய் ரசிகர்கள் விருப்பப்பட்ட இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தேர்தலை பொறுத்தவரை மக்களை கவர வேண்டும் என்றால் சின்னம் மிகவும் முக்கியம். விஜய் மக்கள் இயக்கம் என்பது அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாததால் சுயேச்சை சின்னம்தான் வழங்கப்படும். ஒவ்வொரு விஜய் ரசிகருக்கும் ஒரு சின்னம் என்பதால் அந்த சின்னத்தை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் என்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் கூறப்பட்டு வருகிறது.

Trending

Exit mobile version