தொழில்நுட்பம்

உங்கள் போனில் 5ஜி இருந்தும் இணையதள வேகமாக இல்லையா? என்ன காரணம் தெரியுமா?

Published

on

இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் 5ஜி தொலைத்தொடர்பு சேவை வழங்கப்பட்டு வருகிறது.

ஜியோ, ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் தொடர்ந்து இந்தியா முழுவதும் 5ஜி சேவையை வழங்கும் பணிகளைச் செய்து வருகிறனர்.

இந்தியாவில் 5ஜி தொலைத்தொடர்பு சேவையைப் பயன்படுத்துபவர்களுக்கு 500 எம்பிபிஎஸ் வரை இணையதளம் வேகம் உள்ளதாக ஊக்லா தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: ஏர்டெல் விட ஜியோ 5ஜி வேகம் இரண்டு மடங்கு அதிகம்.. உறுதி செய்த ஊக்லா.. என்ன காரணம் தெரியுமா?

சில 5ஜி போன்களில் இணையதள வேகம் அதிகமாக இருந்தாலும், சிலர் 5ஜி இணையதள வேகம் 4ஜி விட குறைவாக உள்ளதாக டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் புகார் அளித்து வருகிறார்கள்.

5ஜி இணைய வேகம் குறைவாக உள்ளதாகப் பலர் புகார் அளிக்க என்ன காரணம் என்ற டாடா கம்யுனிகேஷன்ஸ் துணைத் தலைவர் விஸ்வநாதன் ராமசாமியிடம் கேட்ட போது, 5ஜி இணையதள சேவை ஏன் சில நேரங்களில் 4ஜி வேகத்தை விட குறைவாக உள்ளது என்பதற்கான காரணங்களை நம்மிடம் அடுக்கினார். அது குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

5ஜி – ஸ்பெக்ட்ரம்

இந்திய டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்குவதற்கான ஸ்பெக்ட்ரம்களை ஆகஸ்ட் மாதம் தான் பெற்றன. ஆனால் இந்தியன் மொபைல் காங்கிரஸ் மாநாட்டை முன்னிட்டு சில முக்கிய நகரங்களில் மட்டும் 5ஜி சேவையை உடனே வழங்க வேண்டிய நிலைக்கு டெலிகாம் நிறுவனங்கள் தள்ளப்பட்டன. ஆனால் இந்தியா முழுவதும் தங்கு தடையின்றி 5ஜி சேவையை வழங்க டெலிகாம் நிறுவனங்களுக்கு 5 வருடங்கள் தேவைப்படும்.

தொழில்நுட்ப பிரச்சனைகள்

புதிதாக ஒரு தொழில்நுட்பம் வரும் போது அதில் சில தொழில்நுட்ப கோளாறுகள் இருக்கும். அவற்றை சரி செய்து சீரான சேவையை வழங்க டெலிகாம் நிறுவனங்கள் நேரம் தேவைப்படும். அவசர அவசரமாகத் தொழில்நுட்ப கேளாருகள் பற்றி கவலையில்லாமல் 5ஜி சேவையை முழுமையாக வழங்கினால் டெலிகாம் நிறுவனங்களுக்குக் கூடுதல் செலவாகும். இப்போது 4ஜி கட்டணத்திலேயே தான் டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகிறன. முழுமையான 5ஜி சேவையை வழங்கும் போது டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவைக்கான கட்டணங்களை உயர்த்தி அறிவிக்கும்.

நெரிசலான நெட்வொர்க்

5ஜி சேவைக்கான ஆரம்பக் கட்டம் தான் இது என்பதால், முழுமையான 5ஜி சேவையை எந்த டெலிகாம் நிறுவனங்களும் வழங்கவில்லை. எனவே 5ஜி மீதுள்ள ஆர்வத்தால் பலர் அதனை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அது டெலிகாம் நிறுவனங்கள் எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையாக உள்ளது. இதனால் 5ஜி சேவையில் நெரிசல் ஏற்பட்டு வேகம் குறையவும் வாய்ப்புள்ளது.

தனிப்பட்ட 5ஜி நெட்வொர்க்

டெலிகாம் நிறுவனங்கள் 4ஜி சேவைகாக தனிப்பட்ட நெட்வொர்க் வைத்துள்ளன. ஆனால் 5ஜி சேவைக்கு இதுவரையில் தனிப்பட்ட நெட்வொர்க் பயன்பாட்டை டெலிகாம் நிறுவனங்கள் வழங்கவில்லை. அதனால் 5ஜி, 4ஜி அல்லது இரண்டுக்கும் நடுவில் ஒரு சேவை என்பது போல தான் பயனர்களுக்கு இருக்கும். இவையே 5ஜி இணையதள வேகம் 4ஜி விட குறைவாக உள்ளதற்கான காரணங்கள் என அவர் தெரிவித்தார்.

Trending

Exit mobile version