உலகம்

பைடன் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்ட இந்தியர்.. யார் இந்த ராஜ் பஞ்சாபி?

Published

on

வாஷிங்டன் : ஆப்ரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் மலேரியா நோயை கட்டுப்படுத்தி அகற்றுவதை நோக்கமாக கொண்ட மலேரியா முன் முயற்சியை வழிநடத்த உலகளாவிய ஒருங்கிணைப்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் ராஜ் பஞ்சாபியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நியமித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று இருக்கும் ஜோ பைடன் பல்வேறு துறைகளுக்கான புதிய அதிகாரிகளை நியமனம் செய்து வருகிறார். அவருடைய நிர்வாகத்தில் பல்வேறு இந்திய வம்சாவளியினருக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஆப்ரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் மலேரியா நோயை கட்டுப்படுத்தி அகற்றுவதை நோக்கமாக கொண்ட மலேரியா கட்டுப்பாட்டு குழுவின் உலகளாவிய ஒருங்கிணைப்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் ராஜ் பஞ்சாபியை நியமித்துள்ளார். லைபீரியாவில் பிறந்த பஞ்சாபியும் அவரது குடும்பத்தினரும் அங்கு ஏற்பட்ட உள்நாட்டுப் போரின்போது நாட்டை விட்டு வெளியேறி 1990 களில் அகதிகளாக அமெரிக்காவிற்கு வந்தனர்.

பின்னர் அவர் மருத்துவ மாணவராக 2007 ஆம் ஆண்டு லைபீரியாவுக்குத் திரும்பினார், மேலும் லாஸ்ட் மைல் ஹெல்த் என்கிற அமைப்பையும் நிறுவியவர்களில் ஒருவராக இருக்கிறார். ராஜ் பஞ்சாபி வட கரோலினா ஸ்கூல் ஆஃப் மெடிசின் பட்டதாரி ஆவார், மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனை மற்றும் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியில் உள் மருத்துவம் மற்றும் முதன்மை பராமரிப்பில் பயிற்சி பெற்றவர், மேலும் ஜான்ஸ் ஹாப்கின்ஸிடமிருந்து தொற்றுநோயியல் துறையில் பொது சுகாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

Also Read: 2022-ம் நிதி ஆண்டுக்கான H-1B விசா விண்ணப்பம் தேதி அறிவிப்பு.. எப்போது முதல் என்று வரை?

ராஜ் பஞ்சாபி ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியில் மருத்துவ உதவி பேராசிரியராகவும், ப்ரிகாம் மற்றும் மகளிர் மருத்துவமனையின் இணை மருத்துவராகவும், லாஸ்ட் மைல் ஹெல்த் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், இணை நிறுவனராகவும் பணியாற்றியுள்ளார். 2013-16 ஆம் காலகட்டங்களில் மேற்கு ஆபிரிக்காவில் எபோலா தொற்றுநோய்க்கு எதிராக பஞ்சாபி மற்றும் அவருடைய லாஸ்ட் மைல் ஹெல்த் குழு முக்கிய பங்கு வகித்தன, ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னணி மற்றும் சமூக சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க உதவியது மற்றும் லைபீரியா அரசாங்கத்துக்கும் அதன் தேசிய எபோலா செயல்பாட்டு மையத்தை வழிநடத்தவும் உதவியது. கொரோனா காலத்திலும் ஆப்ரிக்க அரசாங்கங்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும், முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சிகளை வழங்கவும் பெருமளவில் உதவினார்.

தான் பைடன் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டது குறித்து டிவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ள ராஜ் பஞ்சாபி, அமெரிக்க ஜனாதிபதியின் மலேரியா முன் முயற்சியை வழிநடத்த உலகளாவிய ஒருங்கிணைப்பாளராக ஜனாதிபதி ஜோ பைடனால் நியமிக்கப்பட்டதை பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். இந்த வாய்ப்பை பெற்றதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.‌

2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அமெரிக்க அதிபரின் மலேரியா முன்முயற்சி, ஆப்பிரிக்காவில் 24 கூட்டு நாடுகளையும், தென்கிழக்கு ஆசியாவின் கிரேட்டர் மீகாங் துணைப் பகுதியில் மூன்று திட்டங்களுடன் மலேரியாவைக் கட்டுப்படுத்தவும் மொத்தமாக அகற்றவும் ஆதரிக்கிறது. இந்த பேசிய பஞ்சாபி, இந்தியாவில் வசிக்கும் போது எனது தாத்தா, பாட்டி மற்றும் பெற்றோர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டனர். லைபீரியாவில் சிறுவயதில் நானும் மலேரியாவால் நோய்வாய்ப்பட்டேன், ஆப்பிரிக்காவில் பணியாற்றிய காலத்தில் ஒரு மருத்துவராக, இந்த நோய் பல உயிர்களைப் பறிப்பதை நான் கண்டிருக்கிறேன் என்று கூறினார். மலேரியா முன்முயற்சியும் அதன் கூட்டு நாடுகளும் எவ்வாறு உறுதியுடன் பதிலளித்தார்கள் என்பதை அது செயல்படும் நாடுகளில் நான் பார்த்திருக்கிறேன். மலேரியாவிலிருந்து தப்பிய குழந்தைகளின் பெற்றோரின் முகங்களில் நிம்மதியையும் நான் கண்டேன் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version