இந்தியா

கொரோனா வைரஸ் எப்போ முடியும்.. அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ப்ளூம்பெர்க்!

Published

on

கொரோனா வைரஸ் பெருந்தொற்று எப்ப சார் முடிவுக்கு வரும்? இதுதான் இப்போது உலகின் பெரும்பாலானோரின் கேள்வியாக இருக்கும். கிட்டத்தட்ட ஒரு வருடத்தை கடந்துவிட்டாலும் இன்னமும் எல்லாருடைய வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. பல நாடுகளில் தடுப்பூசிகள் போடும் பணியும் தொடங்கிவிட்டது. புதிய தொடக்கத்திற்கு இது ஒரு அறிவுகுறியாக இருந்தாலும் இப்போது தான் சில நாடுகளில் இரண்டாம் அலையும் பரவ தொடங்கியுள்ளது.ஆனாலும் தடுப்பூசி போடப்படும் அளவை வைத்து ஒரு கணிப்பிற்கு வர முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

உலகம் முழுவதிலும் கொரோனா தடுப்பூசி குறித்த மிகப்பெரிய தரவுத்தளத்தை ப்ளூம்பெர்க் உருவாக்கியுள்ளது, இதுவரை ஒட்டுமொத்தமாக 119 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்கள் நிர்வகிக்கப்படுகின்றன. அமெரிக்காவின் அந்தோனி ஃபியுசி போன்ற அறிவியல் ஆய்வாளர்கள், விஷயங்கள் எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்ப குறைந்தது 70 முதல் 85 சதவிகிதம் வரை மக்களுக்கு செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். ப்ளூம்பெர்க்கின் தடுப்பூசி டிராக்கரின் படி, சில நாடுகள் மற்ற நாடுகளை விட மிக வேகமாக தடுப்பூசி செலுத்தும் பணியில் இறங்கியுள்ளன. ஒரு நபருக்கு 2 டோஸ்கள் என்கிற ரீதியில் 75% அளவை எட்டுவதற்கு முயற்சிக்கின்றன.

உலகிலேயே அதிக தடுப்பூசி விகிதத்தை கொண்ட நாடான இஸ்ரேல், வெறும் இரண்டு மாதங்களில் 75%என்கிற அளவை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கின்றது. அமெரிக்கா அந்த இலக்கை அடைய 2022 புத்தாண்டு வரை ஆகிவிடும். அங்கும் கூட வடக்கு டகோட்டா டெக்சாஸை விட ஆறு மாதங்கள் முன்பாகவே இந்த எண்ணிக்கையை எட்டிவிடும். உலகின் மற்ற நாடுகளை விட மேற்கத்திய பணக்கார நாடுகளில் மட்டும் விரைவாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுக்கொண்டு இருப்பதால் உலகம் முழுவதும் இந்த இலக்கை அடைய குறைந்தது 7 ஆண்டுகள் கூட ஆகலாம்.

ப்ளூம்பெர்க்கின் கால்குலேட்டர் இப்போது தடுப்பூசி போடப்படும் விகிதத்தை பொறுத்து ஒரு குறிப்பிட்ட கால அளவை வழங்குகிறது. இனி வரும் காலங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் வேகம் அதிகரித்தால் 75% அளவை எட்டுவதற்கான கால அளவு குறையும். அதேநேரம் தற்காலிக இடையூறுகளினாலும் இந்த கணக்கீட்டில் மாற்றம் ஏற்படக்கூடும். உதாரணமாக குளிர்கால பனிப்புயல் காரணமாக நியூயார்க்கில் தடுப்பூசி போடும் பணி தாமதம் அடைந்தது இதனால் இலக்கை எட்டுவதற்கு 17 மாதங்கள் என கணிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 13 மாதங்களாக குறைக்கப்பட்டது. அதே போல கனடாவுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் அங்கு தடுப்பூசி செலுத்தும் விகிதம் பாதியாக குறைந்தது.இப்படியே தொடர்ந்தால் அங்கு 75% இலக்கை அடைய 10 ஆண்டுகள் எடுக்கலாம். ஆனால் கனடா அதிக அளவில் தடுப்பூசிகளை ஆர்டர் செய்துள்ளதால் வரும் நாட்களில் தடுப்பூசி செலுத்தும் பணி வேகம் எடுக்கலாம்.

தடுப்பூசிகள் அதிகம் உற்பத்தி செய்யப்படும் போது இதன் வேகம் மேலும் அதிகரிக்கலாம். இந்தியா, மெக்ஸிகோ போன்ற நாடுகளில் இருக்கும் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி மையங்கள் இப்போது தான் பெருமளவிலான உற்பத்தியை தொடங்கி இருக்கின்றன. இதுவரை உலகம் முழுவதிலும் சுமார் 8.5 பில்லியன் தடுப்பூசிகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு நாடு மட்டுமே தடுப்பூசி செலுத்தும் பணியையும் தொடங்கியுள்ளது.

ஹெர்ட் இம்மியூனிட்டியை பெறுதல் :

தடுப்பூசி கொரோனா வைரஸுக்கு எதிராக சில மாதங்கள் உடலை பாதுகாக்கிறது. ஆனால் மக்களில் சிலருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டால் வைரஸ் தடையில்லாமல் பெரும்பான்மையினோருக்கு பரவிக்கொண்டே இருக்கும். அதேசமயம் அதிகமான மக்கள் தடுப்பூசி பெறுவதால் வைரஸுக்கு எதிராக ஒரு கூட்டு பாதுகாப்பை உருவாக்க முடியும். இதனால் குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும். அதற்காக தான் மக்களில் 75% சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என கூறுகின்றனர். இதை தான் ஹெர்ட் இம்மியூனிட்டி என அழைப்பர்.

முன்னேறிய ஒரு சமூகத்தில் ஹெர்ட் இம்மியூனிட்டி என அழைக்கப்படும் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை பெரும் பொழுது, பெரும்பான்மை மக்கள் பாதுகாக்கப்படுவர். அப்படி அவர்களிடம் நோய் எதிர்ப்பு ஆற்றல் இருக்கும் போது வைரஸ் பரவும் வேகத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு மாற்றத்தை கொடுக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு சமூகத்தில் தட்டம்மை வழக்குகள் இருந்தாலும், மக்களிடம் இருக்கும் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக ஒரு நாடு முழுவதும் பரவாமல் அது தடுக்கிறது.

தடுப்பூசி இல்லாமல் இயற்கையாகவே ஹெர்ட் இம்மியூனிட்டி கிடைக்க பெறுவது சமூகத்தில் பெரும்பாலானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு அதில் இருந்து மீண்டு வந்த பின்னர் ஏற்படுவது. ஆனால் இப்படி ஏற்படுவது எவ்வளவு காலம் நீடிக்கும் மீண்டும் வைரஸ் பரவாமல் தடுக்குமா என்பதற்கான உறுதியான தகவல்கள் இல்லை. மேலும் அதற்காக பெருமளவில் வைரஸ் பாதிப்பு ஏற்பட வைப்பதும் ஆபத்தானது என்கிறார்கள். மொத்தத்தில் 75% என்கிற இலக்கை அடையும் போது கொரோனா அச்சத்தில் இருந்து நிச்சயம் ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.

Trending

Exit mobile version