கிரிக்கெட்

சேப்பாக்கம் மைதானத்தில் என்ன பிரச்சனை? இரண்டாவது டெஸ்ட் போட்டி எப்படி இருக்க போகிறது? விரிவான தகவல்!

Published

on

சென்னை: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் சிவப்பு மண் கொண்ட பிட்ச் இந்திய அணிக்கு எதிராக அமைந்த நிலையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கருப்பு மண்ணை நம்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அங்குள்ள பிட்ச் எண் இரண்டில் இந்த போட்டி நடைபெற்றது. இந்தநிலையில் வரும் 13ம் தேதி நடைபெற உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பிட்ச் எண் 5 சரியாக இருக்கும் என தமிழக கிரிக்கெட் சங்கத்தின் செயல்பாட்டாளர் ஒருவர் கூறியுள்ளார். பிட்ச் எண் 2 செம்மண்ணால் ஆன நிலையில் பிட்ச் எண் 5 களிமண்ணால் அமைக்கப்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் பிட்ச் தன்மை இரண்டு நாட்டு வீரர்களையும் படுத்தி எடுத்து விட்டது. முதல் இரண்டு நாட்களில், ஆடுகளம் எங்களுக்கும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் உதவவில்லை, நாங்கள் ஒரு சாலையில் விளையாடியது போல் உணர்ந்தோம் என்று இந்திய வீரர் இஷாந்த் சர்மா கூறியிருந்தார். அதேபோல நான் பார்த்ததிலேயே மோசமான பிட்சை ஐந்தாம் நாள் ஆட்டத்தின் போது அனுபவித்தேன் என இங்கிலாந்து பவுலர் ஆர்ச்சர் கூறியிருக்கிறார்.

முதல் இரண்டு நாட்கள் இங்கிலாந்து அணி தொடர்ந்து பேட்டிங் செய்ததும் இந்திய அணியால் விக்கெட் வீழ்த்த முடியாமல் போனதும் வீரர்களுக்கு வெறுப்பையும் சோர்வையும் ஒருசேர கொடுத்தது. குறிப்பாக ஜோ ரூட் ஆட்டம் இந்திய பவுலர்களுக்கு பெரும் சவாலானதாக பார்க்கப்பட்டது.

இரண்டாவது போட்டியில் எப்படி இருக்கும்?

இந்த காரணத்தினால் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் பிட்ச் மீதான பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. தரை ஊழியர்களின் கூற்றுப்படி, பிட்சின் மேற்பரப்பு அடுத்த போட்டியில் அதிக பவுன்சர் பந்துகளை சுமந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முதல் சில ஓவர்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் வசம் இருக்கும். அதே சமயம் ஸ்பின் பவுலர்களும் பவுன்சை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

பிசிசிஐக்கு பணியாற்றிய முன்னாள் அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, கருப்பு மண் அல்லது களிமண்ணை விட சிவப்பு மண் துகள்களில் பிணைப்பு வலிமை அதிகமாக உள்ளது. அந்த அந்த காரணத்தினாலே சிவப்பு மண் சீக்கிரத்தில் சிதைந்து விடுகிறது. மேலும் அதன் மேற்பரப்பை கொண்ட பிட்சுக்களும் சேதமடைகின்றன என்றார்.

சேப்பாக்கம் மைதானத்தின் மைய சதுக்கத்தில் எட்டு பிட்சுகள் உள்ளன, ஒன்று சிவப்பு மண் முதன்மையானது, கலப்பு வகைகளில் ஒன்று மற்றும் மீதமுள்ளவை குறிப்பிடத்தக்க களிமண் உள்ளடக்கத்தை வழங்குகின்றன. ஆனாலும், அவை அனைத்துமே சிவப்பு மண் அடித்தளத்தைக் கொண்டுள்ளன. தற்போதைய போட்டிக்கான பிட்ச் அமைக்கும் பொறுப்பாளர் திருப்பூரை சேர்ந்த வி.ரமேஷ் குமார் ஆவார்.

பொதுவாக சென்னை சேப்பாக்கம் மைதானம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு உகந்ததாகவே இருந்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 477 ரன்கள் எடுத்திருந்தாலும் அடுத்து விளையாடிய இந்திய அணி 759 ரன்கள் எடுத்து அசத்தியது. ஆனால் கடந்த போட்டியில் மட்டும் தான் பிட்ச் அப்படியே மாறியது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதற்கிடையே இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விநியோகமும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு இந்திய மண்ணில் வைத்து ரசிகர்கள் முன்னிலையில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இதன் முடிவுகள் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்களும் ஆர்வத்தோடு உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version