இந்தியா

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் பிரதமர் மோடி நர்ஸிடம் சொன்ன விஷயம் என்ன தெரியுமா?

Published

on

பிரதமர் நரேந்திர மோடி, இன்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இது குறித்தான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஊசி போட்டுக் கொண்ட பின்னர் பிரதமர் மோடி, தனக்கு தடுப்பூசி செலுத்திய நர்ஸிடம் என்ன பேசினார் என்பது குறித்தான தகவல் தற்போது கவனம் ஈர்த்துள்ளது. 

கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தில், கோவாக்ஸின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் ‘கோவாக்ஸின்’ தடுப்பூசி இன்னும் மூன்றாம் கட்ட பரிசோதனையை நிறைவுசெய்யாத நிலையில் உள்ளதால், அந்தத் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த ஐயம் மருத்துவர்களாலும், அறிவியல் அறிஞர்களாலும் எழுப்பப்படுகின்றன.

முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு, இலவசமாக செலுத்தி வருகின்றது. இந்நிலையில் கூடிய விரைவில் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி விற்பனைக்கு வரும் என்று தகவல் வந்துள்ளது. அப்படி விற்பனைக்கு வரும் தடுப்பூசியை எவ்வளவு ரூபாய்க்குள் விற்க வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு உத்தரவு போட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவுப்படி, 250 ரூபாய்க்குள்ளாகவே கொரோனா தடுப்பூசி விற்கப்பட வேண்டும். அதே நேரத்தில் நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று முதல் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதைத் தாண்டி நோயுற்று இருப்பவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை முடுக்கிவிடுகிறது மத்திய அரசு. இப்படியான சூழலில் தான், கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள விருப்பப்படும் மக்கள், தாங்கள் விரும்பும் தனியார் மருத்துவமனைகளை தேர்வு செய்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அரசு வழிகாட்டியுள்ளது. இதுவரை அரசு மருத்துவமனைகளைத் தவிர, நாட்டில் உள்ள 10,000 தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தலாம் என்று அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல், நாட்டில் உள்ள 1.15 கோடி முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நாட்டில் உள்ள 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசியைப் போட இலக்கு வைத்துள்ளது இந்திய அரசு. ஆனால், கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தின் முதற்கட்டத்திலேயே பல முன்களப் பணியாளர்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக முறையான சோதனைகளை நிறைவு செய்யாத பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள சுகாதார ஊழியர்களே பெரும் தயக்கம் காட்டி வருகின்றனர். இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களின் வெறும் 11 சதவீதம் பேரே கோவாக்ஸின் மருந்துக்கு ஆர்வம் காட்டியுள்ளனர்.

மக்கள் மனதில் இருக்கும் ஐயத்தைப் போக்கும் வகையில் இன்று டெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் மோடி. அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் நர்ஸான நிவேதா என்பவர் தடுப்பூசி செலுத்தினார். 

அவர், ‘பிரதமர் இன்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வருகிறார் என்கிற விஷயம் கடைசி நேரத்தில் தான் எங்களுக்குச் சொல்லப்பட்டது. தடுப்பூசி போட்டு முடித்தப் பின்னர், ‘முடிச்சாச்சா? எனக்கு எதுவுமே தெரியல’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார் பிரதமர்.

தடுப்பூசி போடும் நேரத்தில் நாங்கள் எல்லாம் எங்கிருந்து வந்து பணி செய்கிறோம் என்று கேற்று பேசிக் கொண்டிருந்தார். அவர் அப்படிப் பேசியது நன்றாக இருந்தது’ என்று தெரிவித்துள்ளார். 

seithichurul

Trending

Exit mobile version