தமிழ்நாடு

‘சசிகலா பற்றி ஓ.பி.எஸ் மவுனம் ஏன்?’- துரைமுருகன் கேள்வி

Published

on

சசிகலா பற்றி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து மவுனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன்.

சொத்துக் குவிப்பு வழக்கில், சிறைத் தண்டனையை முடித்துவிட்டு, மூன்று நாட்களுக்கு முன்னர் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு வந்தார் சசிகலா. அவருக்கு அமமுக தொண்டர்கள் மற்றும் அதிமுகவில் இருக்கும் அவரது ஆதரவாளர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர். கர்நாடகா எல்லையில் தொடங்கிய இந்த வரவேற்பானது, சென்னை தியாகராய நகரில் உள்ள தனது வீட்டுக்கு சசிகலா வரும் வரை தொடர்ந்தது. அவருக்கு சுமார் 22 மணி நேரம் தொடர் வரவேற்பு கொடுத்தனர் ஆதரவாளர்கள். சசிகலாவின் இந்த மாஸ் கம்-பேக் தமிழக அரசியல் தளத்தில் முக்கியப் பேசு பொருளாக மாறியுள்ளது.

இதனால் அதிமுகவில் சசிகலா – ஈ.பி.எஸ் இடையே கட்சியைக் கைப்பற்றுவதில் பனிப் போர் நிலவி வருவதாக பேச்சு உள்ளது. அதே நேரத்தில் சசிகலாவுக்கு எதிராக ‘தர்ம யுத்தம்’ நடத்திய ஓ.பன்னீர்செல்வம், அவர் பற்றி எந்த வித கருத்தையும் தெரிவிக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்ததே அதற்கு காரணம் என்று பரவலாக சொல்லப்படுகிறது.

இது குறித்துப் பேசியுள்ள துரைமுருகன், ‘திமுக தரப்பில் எடப்பாடி முகாமில் உள்ள அதிமுகவுக்கு எந்த பாதிப்பையும் நாங்கள் ஏற்படுத்த வில்லை. ஆனால், சசிகலா விடுதலையாகி வந்ததில் இருந்து அவர்களிடம் ஒரு விதப் பதற்றம் காணப்படுகிறது. அதே நேரத்தில் சசிகலா, பற்றி எதையும் பேசாமல் வீட்டுக்கு உள்ளேயே தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஓ.பி.எஸ். அவர் என்ன சதித் திட்டம் வைத்திருக்கிறாரோ என்று தெரியவில்லை. போற போக்கைப் பார்த்தால் சட்டமன்றத் தேர்தல் வரை அதிமுக இருக்குமா என்பது கூடத் தெரியவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version