கட்டுரைகள்

EIA 2020 என்றால் என்ன? சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன?

Published

on

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவை மறந்து அதிகம் விவாதிக்கப்படும் ஒன்றாக EIA 2020 (சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020) உள்ளது. எனவே EIA 2020 என்றால் என்ன? சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன? என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்றால் என்ன?

இந்தியாவில் பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள், சுரங்கங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் போன்ற திட்டங்களைத் தொடங்கும் முன்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன் கீழ் அனுமதி பெற வேண்டும்.

அதற்காக, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2006 சட்டத்தின் கீழ், ஒரு இடத்தில் செயல்படுத்தப்பட உள்ள திட்டம் குறித்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தயார் செய்ய வேண்டும். அரசு அந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை ஆய்வு செய்து, வர இருக்கும் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லை என்றால் அனுமதியும், ஆபத்து எனில் அனுமதியை மறுக்கவும் செய்யும்.

உதாரணத்திற்கு, நீங்கள் வசிக்கும் பகுதியில் ஒரு ரசாயன தொழிற்சாலை தொடங்க இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். சம்மந்தப்பட்ட நிறுவனம் அங்கு தொழிற்சாலையைத் தொடங்கும் முன்பு தொழிற்சாலை அமைக்கப்படும் வடிவம், பரப்பளவு, அதிலிருந்து வெளியாகும் கழிவுகள், அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள், கழிவுகளைப் பாதிப்பு ஏற்படாதபடி வெளியேற்றுவதற்கான வழிமுறை குறித்து ஒரு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கும்.

அதனை ஆய்வு செய்யும் அரசு, பசுமை தீர்ப்பாயம் மற்றும் மக்களிடம் கருத்துக்களைக் கேட்கும். பின்னர் அதில் மக்களுக்குப் பாதிப்பு இல்லாத போது அனுமதியளிக்கும்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020-ஐ எதிர்க்க என்ன காரணம்?

மேலே உள்ளதைப் படிக்கும் போது, இது நல்லது தானே, அதை ஏன் எதிர்க்க வேண்டும் என்று கேள்வி எழும். ஆனால் சுற்றுச்சூழல் தாக்கச் சட்டம் 2006 உள்ள போதே பல நிறுவனங்கள் அதற்கு எதிராக தங்களது தொழிற்சாலையாகச் செயல்படுத்தி வருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்று தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதற்குத் தமிழகத்தில் ஸ்டெர்லைட், ஸ்பிக் உள்ளிட்ட நிறுவனங்கள் சாட்சி.

இந்நிலையில் 2020 மார்ச் 12-ம் தேதி மத்திய அரசால் வெளியிடப்பட்ட புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை 2020, நிறுவனங்களுக்குச் சாதகமாக உள்ளதாகவும், அதில் ஏராளமான குறைகள் உள்ளதாகவும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதில் தலையிட்ட நீதிமன்றம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 வரைவு அறிக்கையை 22 மொழிகளில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் அதை மதிக்காத அரசு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் வெளியிட்டுள்ளது. மேலும் நீதிமன்றம் மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்களிடம் கருத்துக் கேட்கவும் உத்தரவிட்டுள்ளது. அதற்கு 20 நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் தாக்கச் சட்டங்கள் ஓர் அளவுக்குக் கடுமையாக உள்ள போதே நிறுவனங்கள் அதை மதிக்காமல் செயல்படுகின்றன என்று கூறப்படும் நிலையில், நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு பல திருத்தங்களைச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020-ல் செய்துள்ளது என்பதே அதை எதிர்ப்பதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

EIA-2020 வரைவு அறிக்கை நகல்:

seithichurul

Trending

Exit mobile version