உலகம்

இந்தியர்களின் எதிர்காலம் அமெரிக்காவில் எப்படி இருக்க போகிறது? பைடன் என்ன செய்ய போகிறார்?

Published

on

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றத்தில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முன்னாள் அதிபர் டிரம்ப் நடைமுறைப்படுத்திய நிறைய திட்டங்களை ரத்து செய்தும் இருக்கிறார். இந்த நிலையில் ஜோ பைடனின் தொடர் நடவடிக்கைகளில் அவருடைய குடியேற்ற கொள்கைகளில் இருந்து இந்தியர்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்கிற கேள்வி எழுந்துள்ளன.

எல்லைப் பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வ குடியேற்றம் உள்ளிட்ட பல பிரிவுகளில் புதிய நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜோ பைடன் பதவியேற்ற இரண்டு வாரத்திற்குள் ஒன்பது நிர்வாக உத்தரவுகளை அமல்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த விவகாரத்தில் அவர் முன்பு கூறியது போல, நான் புதிய சட்டத்தை உருவாக்கவில்லை. மோசமான கொள்கையை நீக்குகிறேன் என்கிற கருத்தின் கீழ் செயல்பட்டு வருகிறார்.

அதிபர் பைடனின் முன்மொழியப்பட்ட குடியேற்றத் திட்டம் குறித்த அறிக்கையின் தாக்கங்கள் இன்னும் முழுமையான விவரங்களுடன் வெளியாகவில்லை என்றாலும், பிரச்சாரத்தின் போது அவர் முன்மொழிந்த சில திட்டங்கள் பலன் கொடுக்குமா என இந்தியர்கள் சிலர் கவலை கொள்ள தொடங்கியுள்ளனர்.

கொரோனா தொற்றுநோய் காலத்தில் அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. அதன் காரணமாக முந்தைய டிரம்ப் நிர்வாகம் உள்நாட்டு தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக தொடர்ச்சியான தடைகள் மற்றும் விசா இடைநீக்கங்களை அமல்படுத்தியது. இதனால் பல புலம் பெயர்ந்தோர், வெளிநாட்டினரின் எதிர்காலம் என்னவென்றே தெரியாத நிலை உருவானது.

அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக வசிக்கும் 500,000 இந்தியர்களுக்கு நிரந்தர வசிப்பிடத்திற்கான தெளிவான பாதையை ஏற்படுத்தி கொடுப்பதாக அதிபர் பைடன் உறுதியளித்திருந்தார். அதில் முதன்மையாக வேலைவாய்ப்பு அடிப்படையிலான க்ரீன் கார்டு எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் வேலைவாய்ப்பு அடிப்படையிலான புலம்பெயர்ந்த விசாக்களின் இடஒதுக்கீட்டை அகற்றவும் உறுதியளித்தார்.

அவரது முன்மொழியப்பட்ட குடிவரவு மசோதா மேலும் முன்னேற்றம் கண்டது, STEM பட்டங்களை வைத்திருக்கும் இந்தியர்கள் நிரந்தர வசிப்பிடத்திற்கும் அப்படியே குடியுரிமைக்கும் கோரிக்கை வைக்கும் விரைவான பாதைகளை தேடக்கூடிய நடவடிக்கைகளும் கோடிட்டு காட்டப்பட்டுள்ளன.

ஜோ பைடனின் பல நடவடிக்கைகள் அமெரிக்காவில் ஒரு புதிய வாழ்க்கையை எதிர்பார்த்து காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களின் காதுகளுக்கு நற்செய்தியாக வந்து சேர்ந்தாலும் கூட பல அடிப்படை தடைகள் உள்ளன, குறிப்பாக குடியரசு கட்சியிடம் இருந்து எதிர்பார்க்கலாம். ஜனநாயகக் கட்சியினர், பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் இரண்டிலும் ஆதிக்கம் செலுத்தினாலும் கூட புதிய மசோதாக்களை நிறைவேற்றுவது அவ்வளவு சுமூகமாக இருக்கும் என்று அர்த்தமாகாது.

ஏனெனில் மசோதாக்களை சட்டமாக மாற்ற ஜனநாயகக் கட்சிக்கு காங்கிரசில் போதுமான இருந்தாலும், செனட்டில் மெஜாரிட்டிக்கு தேவையான 60 வாக்குகளைப் பெறுவதில் சற்று குறைவாக உள்ளனர், இதனால் குடியரசு கட்சி முன்மொழியப்படும் மசோதா தாக்கல் செய்வதைத் தடுக்கும்.

அதேபோல பல தொகுதிகளில் வேலைவாய்ப்பு சர்ச்சைக்குரிய பிரச்சனையாக இருக்கும் இந்த நேரத்தில் அதிபர் பைடனுக்கு சொந்த கட்சியில் இருந்தே ஒருமனதாக ஆதரவைப் பெறுவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து அமெரிக்க பொருளாதாரம் மீண்டு வரும் வரை க்ரீன் கார்டு எண்ணிக்கையை தற்காலிகமாகக் குறைப்பதற்கான ஒரு விதியை அதிபர் பைடன் ஏற்றுக்கொள்ள போவதாகவும் தெரிகிறது.

சில நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தியர்கள் அதிக அளவிலான விண்ணப்பங்களை மேற்கொண்டுள்ள EB-5 வகை விசா மட்டும் இன்னும் கவனிக்கப்படாமலேயே உள்ளது. இருப்பினும் செனட்டில் குடியேற்றம் பற்றிய முக்கியமான பிரச்சினையை அதிபர் பைடன் எப்படி வழிநடத்த போகிறார் என்பதை இந்தியர்கள் கூர்ந்து கவனிக்க தொடங்கியுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version