தமிழ்நாடு

ஏர்டெல் பொருட்களை விற்க மாட்டோம்: செல்போன் சேல்ஸ் & சர்வீஸ் சங்கத்தின் திடீர் அறிவிப்பு

Published

on

ஏர்டெல் பொருட்களை விற்க மாட்டோம் என்றும் ஏர்டெல் ரீசார்ஜ் செய்ய மாட்டோம் என்றும் திருப்பத்தூர் செல்போன் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் ரீசார்ஜ் நல சங்கம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏர்டெல் நிறுவனம் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் இதனை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட செல்போன் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் மற்றும் ரீசார்ஜ் நலம் சங்கம் இன்று ஒரு நாள் மட்டும் ஏர்டெல் பொருட்களை விற்க மாட்டோம் என அறிவித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செல்போன் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் மற்றும் ரீசார்ஜ் கடைகள் இருக்கும் நிலையில் இன்று ஒரு நாள் மாநில அளவில் நடத்தும் போராட்டத்தால் ஏர்டெல் நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்று தெரிகிறது.

தினமும் இரண்டு சிம் கார்டுகளை விற்பனை செய்தால் மட்டுமே ரீசார்ஜ் செய்ய அனுமதி வழங்கப்படும் என ஏர்டெல் நிபந்தனை விதித்து உள்ளதால் இந்த போராட்டம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்களுக்கான சேவை மையங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் விற்பனையாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஏர்டெல் நிறுவனம் தெருவோரங்களில் கடை போட்டு சிம்களை விற்பனை செய்யும்போது தாங்கள் எப்படி வாடிக்கையாளர்களுக்கு சிம்களை விற்க முடியும் என்று கூறியுள்ள விற்பனையாளர்கள், ஏர்டெல் நிறுவனம் சில்லறை வியாபாரிகளை நசுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்தநிலையில் ஏர்டெல் நிறுவனத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று போராட்டம் நடைபெற்று வருவதாக திருப்பத்தூர் செல்போன் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் மற்றும் ரீசார்ஜ் கடைகள் நலச்சங்கம் தெரிவித்துள்ளனர்.

 

Trending

Exit mobile version