உலகம்

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கை நாங்கள் கவனித்து வருகிறோம்: அமெரிக்கா கருத்து!

Published

on

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில், பிரதமர் நரேந்திரமோடி, நீரவ் மோடி மற்றும் லலித் மோடியை குறிப்பிட்டு ‘அனைத்து திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிகிறது ஏன்? என கேள்வி எழுப்பினார். மோடி சமூகம் குறித்து அவதூறு உண்டாக்கும் வகையில் பேசியதாக, ராகுல்காந்தியின் மீது பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏவும், முன்னாள் மந்திரியுமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

ராகுல் காந்தி குற்றவாளி

கடந்த 4 வருடங்களாக நடைபெற்ற இந்த வழக்கில், மார்ச் மாதம் 24 ஆம் தேதி ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேவேளையில், இந்த வழக்கில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யவும் அவகாசம் வழங்கி, 30 நாட்கள் ஜாமினும் வழங்கியது. பிறகு, ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது.

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர். இந்த பிரச்சனை கடந்த சில தினங்களாக நாடாளுமன்றத்திலும் எதிரொலித்து வருகிறது.

அமெரிக்கா கருத்து

அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்க அரசு கருத்து தெரிவித்துள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகைத் துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேலிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியை எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரத்திற்கு மரியாதை அளிப்பது தான் ஜனநாயகத்திற்கு அடிப்படை.

இந்திய நீதிமன்றத்தில் நடைபெறும் ராகுல் காந்தி மீதான வழக்கை நாங்கள் கவனித்து வருகிறோம். கருத்துச் சுதந்திரம் உள்பட ஜனநாயக மதிப்புகளை பாதுகாப்பது குறித்த நிலைப்பாட்டை இந்திய அரசுடன் நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version