விமர்சனம்

நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்” – பேரன்பின் விமர்சனம் இதோ!

Published

on

கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி என வித்தியாசமான கதைகளையும், மனிதர்களையும் கலை படைப்பின் உச்சம் கொண்டு தந்த இயக்குநர் ராம், தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு இட்டுச் சென்றிருக்கும் படம் தான் இந்த பேரன்பு.

இப்படியொரு படத்தை எடுத்து விட்டு, சர்வதேச நாடுகளில் விருதுகளையும் பாராட்டுக்களையும் குவித்த பிறகும், கடந்த ஆண்டு பேரன்பு தமிழ்நாட்டில் ரிலீசாக முடியாமல் போனது யார் செய்த சதி என்பது தான் விளங்கவில்லை.

இது வியாபார படம் அல்ல.. இதனை மக்கள் ரசிக்க மாட்டார்கள் என்ற கூற்று எங்கிருந்துதான் வருகிறதோ.. இப்படிப்பட்ட ஒரு தரமான படைப்பை நிச்சயம் மக்கள் கொண்டாடுவார்கள். கொண்டாட வேண்டும் என்பதே தாழ்மையான வேண்டுகோள்.

படத்தின் கதை:

பிளாஸ்டிக் சைல்டு அதாவது மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியை பெற்று வளர்த்து 11 ஆண்டுகள் கழித்த நிலையில், இதற்கு மேலும், இவளை பராமரிப்பதில், தன்னுடைய வாழ்க்கையை தொலைத்து விடக் கூடாது என்று, மகளையும் கணவரையும் விட்டு ஒரு மனைவி பிரிகிறாள்.

அந்த கணத்திலிருந்து, தன்னை வெறுத்துவந்த தன்னை நெருங்கவிடாத பாப்பாவை ஒரு அப்பா எப்படி பேரன்பு செலுத்தி வளர்க்கிறார் என்பதே படத்தின் கதை.

பெண் பிள்ளையை வளர்ப்பது என்பது சாதாரண விஷயமா? அதிலும் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியை, அத்தனை துயரத்தையும், வாழ்க்கையின் நீரோட்டமாக கடத்துகின்றார் இயக்குநர் ராம்.

அமுதவனாக வாழ்ந்துள்ள மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியின் நடிப்புக்கும் பாப்பாவாக இம்மி அளவும் பிசாகாத ஒரு பிளாஸ்டிக் சைல்டாக மாறி நடித்துள்ள ‘தங்கமீன்கள்’ சாதனாவிற்கும் நிச்சயம் தேசிய விருதுகள் கிடைக்க வேண்டும்.

நீண்ட நாட்களுக்கு பிறகு அஞ்சலி இந்த படத்தில் கற்றது தமிழ் அஞ்சலியின் அடுத்த வெர்ஷனாக வந்து நெஞ்சில் குடிகொள்கிறார். மேலும், இந்த படத்தில் திருநங்கையாக நடித்துள்ள அஞ்சலி அமீரும் நடிப்பில் அசத்தியுள்ளார்.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் நம்மை படத்திற்குள் அழைத்துச் சென்று அங்கேயே கட்டிப் போட்டு விடுகின்றன.

செத்துப் போச்சு மனசு அந்த பாடலின் வலிகள் நம்மை ரணம் கொள்ள செய்கின்றன.

மாற்றுத் திறனாளி குழந்தையை வைத்து அனுதாபமான படத்தை ராம் இயக்கவில்லை. அதனை தாண்டி அவர்களின் பெற்றோர்களின் வாழ்க்கையையும், அனுதினமும் சிறிய பிரச்னைகளுக்கே தற்கொலை செய்து கொள்ளும் சில மூடர்களுக்கு நாம் எல்லாம் எந்த அளவுக்கு ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம் என்பதை ஆணித்தரமாக பதியவைத்துள்ளார் பேரன்பு வழி காட்டி ராம்.

படத்திற்கு எதார்த்தம் மற்றும் கலையுணர்வு என்று தனது சினிமாவின் ஆற்றலையும் ராம் ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு காட்சியிலும் காண்பித்துக் கொண்டே நகர்கிறார். நட்சத்திரங்களை எண்ணும் குழந்தைக்கு நான்கு வராது, நான்கு வரவில்லை என்றால் என்ன எண்பதற்கு மம்முட்டி சொல்லும் விளக்கம் இருக்கிறதே அற்புதம்.

பேரன்பு பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்.

சினி ரேட்டிங்: 4.5/5.

seithichurul

Trending

Exit mobile version