தமிழ்நாடு

விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கலசங்கள் திருட்டு: பக்தர்கள் அதிர்ச்சி

Published

on

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் திருட்டு போய்விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்வார்கள். பஞ்சபூதங்களை மையமாகக் கொண்ட இந்த கோவிலில் ஐந்து மூர்த்திகள், ஐந்து தேர்கள், ஐந்து கோபுரங்கள், ஐந்து பிரகாரங்கள், ஐந்து தீர்த்தங்கள், ஐந்து நந்திகள், ஐந்து கொடிமரங்கள், என அனைத்துமே ஐந்து என அமையப்பெற்றது தனிச்சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா 20 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் அம்மன் சன்னதி மூலவர் கோபுரத்தில் உள்ள மூன்று தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் நள்ளிரவில் திருடு போய் உள்ளன. மர்மநபர்களால் திருடப்பட்ட இந்த மூன்று கலசங்களும் மூன்று அடி உயரம் கொண்டவை என்றும் மூன்று கலசங்களிலும் 400 கிராம் தங்க முலாம் பூசப்பட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

1500 ஆண்டுகள் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இருந்து கலசங்கள் திருடப்பட்டதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள விருத்தாசலம் போலீசார் சிசிடிவி மூலம் காட்சிகளை ஆய்வு செய்து கலசங்களை திருடிய நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version