கிரிக்கெட்

“Depressionல திக்கு முக்காடிட்டேன்!”- தன் வாழ்க்கையின் சோகப் பக்கம் பற்றி முதன்முறையாக மனம் திறந்த கோலி

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தான் மனச்சோர்வில் உழன்ற காலம் குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மார்க் நிகோலஸுடன் நேர்காணலின் போது, இது பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார் கோலி. 2014 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்குச் சென்று கிரிக்கெட் தொடர்களை விளையாடியது. அந்த தொடரில் கோலியின் பேட்டிங் மிகவும் சொதப்பலாக அமைந்தது. அப்போது தான், தன் வாழ்க்கையின் மிகப் பெரிய டிப்ரஷனை கோலி அனுபவித்ததாக சொல்கிறார்.

இது பற்றி அவர் தெரிவிக்கையில், ‘2014 இங்கிலாந்து தொடர் என்பதை என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. அப்போது என்ன நடக்கிறது என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் என்ன செய்து ரன்கள் அடிக்க வேண்டும் என்று எனக்கு சுத்தமாக தெரியவில்லை. இந்த உலகின் மிகத் தனிமையான மனிதன் நான் தான் என்று அப்போது உணர்ந்தேன்’ என்றுள்ளார்.

2014 இங்கிலாந்து தொடரில், 5 டெஸ்ட் போட்டியில் விளையாடிய கோலி 10 இன்னிங்ஸில், 1, 8, 25, 0, 39, 28, 0,7, 6 மற்றும் 20 ஆகிய ரன்களை எடுத்தார். அந்த தொடரில் அவரது பேட்டிங் சராசரி 13.40 ஆகும். இதனால் இந்திய அணியில் இருந்து அவர் விலக்கப்படுவார் என்றெல்லாம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அடுத்ததாக நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலும் அவருக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. அதில் 692 ரன்கள் அடித்துச் சாதனைப் படைத்தார்.

‘அந்தத் தொடரின் போது தான், நிறைய அன்பானவர்கள் நம்மைச் சுற்றி இருக்கும் போதிலும், தனிமை என்பது வரும் என உணர்ந்தேன். எனக்கு அப்போது தேவைப்பட்டது தனிப்பட்ட வகையிலான அன்பு அல்ல. தொழில் ரீதியிலான ஆதரவு மட்டுமே’ என்று மேலும் தன் 2014 நிலை குறித்து விவரிக்கிறார் கோலி.

அவர் மேலும், ‘உள ஆரோக்கியம் என்பது ஒருவருக்கு மிகவும் முக்கியம். விளையாட்டு வீரருக்கும் அது மிகவும் முக்கியமானது ஆகும். அது பல மாதங்களுக்குத் தொடர்ந்தால் ஒருவரின் வாழ்க்கையையே அழித்து விடும்’ என்று அட்வைஸுடன் முடித்தார்.

seithichurul

Trending

Exit mobile version