கிரிக்கெட்
டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்தை இழந்தார் கோலி
டெஸ்ட் கிரிக்கெட்டின் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார் விராட் கோலி. தற்போது அந்த இடத்தை நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பிடித்துள்ளார்.
கோலி, 879 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது 890 புள்ளிகள் பெற்று வில்லியம்சன் அந்த இடத்தைத் தட்டிப் பறித்துள்ளார். மூன்றாவது இடத்தில் ஃபார்முக்காக சிரமப்பட்டு வரும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் இருக்கிறார். அவர் 877 புள்ளிகளுடன் கோலிக்கு டஃப் போட்டி கொடுத்து வருகிறார். தற்போது நியூசிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் விளைவாக சிறந்த பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் வில்லியம்சன்.
இந்தத் தரவரிசையில் ஏற்றம் கண்டு 784 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறார் தற்போதைய இந்திய டெஸ்ட் கேப்டன் அஜிங்கியே ரஹானே. செத்தேஷ்வர் புஜாரா, சற்று சரிவு கண்டு 728 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளார். பவுலர்களுக்கான தரவரிசையல் பாட் கம்மின்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். 7வது இடத்தில் ரவிச்சந்திரன் அஷ்வினும், 9வது இடத்தில் ஜஸ்ப்ரீத் பும்ராவும் உள்ளனர்.