கிரிக்கெட்

INDvENG- நடுமைதானத்தில் சண்டை போட்டுக் கொண்ட கோலி – பென் ஸ்டோக்ஸ்; பதறவைத்த சம்பவம்!

Published

on

இந்தியா – இங்கிலாந்துக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பித்தது. போட்டிக்கான டாஸ் வென்ற இங்கிலாந்து, பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஆட்டத்தின் முதல் நாளான இன்று தற்போது வரை இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்து திணறி வருகிறது. இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் இந்திய கேப்டன் விராட் கோலி இடையிலான நடு மைதான சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. தற்போது மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்திய அணி, 2 – 1 என்ற நிலையில் முன்னிலைப் பெற்றுள்ளது. கடைசி போட்டியிலும் வெற்றி பெற்றால் இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இங்கிலாந்து அணி, மூன்றாவது போட்டியைப் போல முழுவதும் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் விளையாட வேண்டும் என்கிற முனைப்போடு களமிறங்கியுள்ளது.

இன்று இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் விக்கெட்டை இந்திய வேகப் பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கைப்பற்றியுடன் ஸ்டோக்ஸ் களத்திற்கு வந்தார். அப்படி வந்தவருக்கு பவுன்சர் போட்டு நெருக்கடி கொடுத்தார் சிராஜ். இதனால் கடுப்படைந்த ஸ்டோக்ஸ், சிராஜை கண்டபடி திட்டினார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த விராட் கோலிக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது. அப்போது ஸ்டோக்ஸ் அருகில் வந்து அவரை சிரித்தபடி எள்ளி நகையாடினார். ஆனால் ஸ்டோக்ஸும் கோலிக்கு விடாமல் கவுன்டர் கொடுக்கவே, அவர் உஷ்ணமானார். கோலி முகத்திலிருந்த சிரிப்பு மறைந்து, சிடுசிடுத்துப் பேசினார்.

இது மைதானத்திலும் களத்தில் இருந்த வீரர்கள் இடையிலும் பதற்றத்தை அதிகரித்தது. ஆட்டத்தின் நடுவர், இருவரையும் விலக்கி விடும் அளவுக்கு வார்த்தைப் போர் முற்றியது.

இந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து கோலி, விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட்டிடம், ‘ஸ்டோஸை தொடர்ந்து ஸ்லெட்ஜ் பண்ணு’ என்றார்.

இன்றைய போட்டியில் பென் ஸ்டோக்ஸ், அரைசதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version