செய்திகள்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு செப்டம்பர் 22 அன்று விக்கிரவாண்டி அருகே!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய், சமீபத்தில் தனது புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்ற பெயரில் அரசியல் அரங்கில் நுழைந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தவெக கல்வி விருது விழாவின் போது, கட்சியின் முதல் மாநாடு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதலில் இந்த மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டது.

பின்னர், மாநாடு திருச்சியில் நடைபெற இருக்கின்றதாக செய்திகள் வெளியானது. திருச்சியின் ஜி கார்னர் பகுதியில் உள்ள ஒரு திடலில் மாநாடு நடத்துவதற்கான அனுமதி கோரப்பட்டது, ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச் சாவடி அருகே, வி.சாலை கிராமம் என்ற இடத்தில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடத்தப்பட உள்ளது.

இந்த மாநாட்டிற்கு அனுமதி கோரி, தவெக சார்பில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரடியாக விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் ஏடிஎஸ்பி திருமாலை சந்தித்து இந்த மனுவை அளித்தார். செப்டம்பர் 22 ஆம் தேதி நடைபெற உள்ள மாநாட்டிற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்கக் கோரியுள்ளனர்.

தவெக கட்சியின் கொடி கடந்த 22 ஆம் தேதி சென்னையின் பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த கொடியில், இரண்டு போர்யானைகள், வாகை மலர் மற்றும் 28 நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த கொடியின் பின்னால் ஒரு முக்கியமான வரலாற்று சிறப்புக்குரிய குறிப்பு உள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார், மேலும் அதனை கட்சியின் முதல் மாநாட்டில் அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Poovizhi

Trending

Exit mobile version