தமிழ்நாடு

நான் பேசுறது கேட்குதா? அதிரடி பிரச்சாரத்தில் இறங்கிய விஜயகாந்த்!

Published

on

தமிழகத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் அதிரடியாக இறங்கியுள்ளார்.

இந்த மக்களவை தேர்தலில் தேமுதிக அதிமுக, பாஜக, பாமக உடன் கூட்டணி வைத்துள்ளது. இதனையடுத்து தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். கூட்டணி கட்சியினருக்காக பம்பரம் போன்று சுழன்று சுழன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பிரேமலதா. ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை காரணமாக பிரச்சாரத்திற்கு செல்லாமல் ஓய்வில் இருந்து வந்தார்.

ஆனால் அவர் விரைவில் பிரச்சாரத்துக்கு வருவார் என பிரேமலதா சில தினங்களுக்கு முன்னர் பிரச்சாரத்தில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வருவாரா? அப்படி வந்தால் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு தேமுதிகவினரிடையே இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று சென்னையில் தனது பிரச்சாரத்தை அதிரடியாக தொடங்கினார் விஜயகாந்த்.

மத்திய சென்னை மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து வில்லிவாக்கத்தில் பிரச்சாரத்தை துவக்கினார் விஜயகாந்த். இதனையடுத்து விஜயகாந்தை பார்க்க மக்கள் கூட்டம் திரண்டது. பிரச்சாரத்தில் மைக்கை பிடித்து பேசிய விஜயகாந்த், நான் பேசுறது கேட்குதா? என கேட்டார். இது தேமுதிக தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை குறித்து பேசிய விஜயகாந்த் பாமக வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து மாம்பலம் சின்னத்தில் வாக்கு கேட்டார்.

விஜயகாந்துக்கு பேசுவதில் சிரமம் இருப்பதால் அதிகமாக பேசாமல் கட்சியின் சின்னம் மற்றும் வேட்பாளர்களின் பெயர்களை மட்டும் சொல்லி வாக்களிக்குமாறு கேட்டு பிரச்சாரம் செய்தார். இன்றுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில் விஜயகாந்த் நேற்று பிரச்சாரத்தை தொடங்கியது கூட்டணி கட்சியினருக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version