சினிமா

வெற்றிமாறனை பார்த்து வெட்கப்பட்ட விஜய்சேதுபதி: காரணம் இதுதான்!

Published

on

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த விழாவில் படக்குழு கலந்து கொண்டது.

இதில் நடிகர் விஜய்சேதுபதி பேசியதாவது, “இந்தப் படத்தில் எனக்கு பிரதானமாக இருப்பது வெற்றிமாறன்தான். மேக்கிங் வீடியோவிலேயே அவரது உழைப்பைப் பார்த்திருப்பீர்கள். நான் ஒரு களிமண் போலதான் அங்கு போவேன். அவர் என்ன சொல்கிறாரோ அதை செய்வேன். அவர் சொல்லாமல், அவரது பிஹேவியரில் இருந்தும் புரிந்து கொண்டு செய்வேன்.

இந்தப் படத்தின் பெருவெடிப்பு அவருடைய சிந்தனையில் இருந்துதான் தொடங்கியது. எப்போதுமே யானைகள் பணிவாக இருக்கும்போது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதன்போலதான், அவருடைய அறிவும், போக்கும், செயல்பாடும் பிரம்மாண்டமாக இருக்கும். அவருடைய கிரகிப்புத் தன்மை எப்போதும் என்னை ஆச்சரியப்பட வைக்கும். நல்லவேளை நான் பெண்ணாக இல்லை. இப்போதும் அவரைப் பார்த்து பேசாததற்கு காரணம் அதுதான். கூச்சமாக உள்ளது. சிந்தனையில் தடுமாறினாலும், மரியாதையில் அவரிடம் தடுமாறியது இல்லை.

உணவு சமைக்கும்போதே அதை பரிமாறி சுவைத்துப் பார்க்க சொல்லும் தைரியம் எத்தனை பேரிடம் இருக்கும் எனத் தெரியவில்லை. அப்படி படம் உருவாகிக் கொண்டிருக்கும்போதே என்னிடம் கேட்டார். அப்படி ஒரு அற்புதமான இயக்குநர் அவர். கதை தொடர்பாக என்னிடம் பல கேள்விகள் இருந்தது. அதை அவரிடம் கேட்டு புரிந்து கொண்டு வாத்தியாரை கொடுத்திருக்கிறேன். இங்கு வாத்தியார் என்பது விஜய்சேதுபதி கிடையாது.

பல வாத்தியார்களை கிரகித்துக் கொடுத்த வெற்றிமாறன்தான். இந்தப் படம் இப்படி வெளியானதுக்கு முக்கிய காரணம் வெற்றிமாறன். அவருக்கும் படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கும் நன்றி. மக்கள் அதை ஏற்றுக் கொண்டதற்கும் நன்றி. நகைச்சுவை நடிகராக இருந்து, கதையின் நாயகனாக வெற்றி சாரின் மீது நம்பிக்கை வைத்து நகர்ந்து வந்திருக்கும் சூரிக்கும் பாராட்டுகள். க/பெ ரணசிங்கம் படத்தில் பவானியுடன் நடித்திருந்தேன். அதன் பிறகு இரண்டாவது படம் இது. தன் வேலையை சரியாக புரிந்து கொண்டு நடிக்கக்கூடியவர்களில் ஒருவர். படத்தில் வரும் காட்டி அரசன் வேல்ராஜ். அந்த அளவுக்கு சிறப்பான பணியை செய்துள்ளார்.

ராஜீவ் சார் இந்தப் படத்தில் நடித்தபோது நான் மிகவும் ரசித்துப் பார்த்தேன். ஒரு மனிதனின் வாழ்க்கையையும் மொழியையும் புரிந்து கொள்ள கூடிய படத்தை அவன் ரசிக்கும்படி கொடுப்பது சாதாரணம் அல்ல. என் நினைவுகளில் மறக்க முடியாத படத்தைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

seithichurul

Trending

Exit mobile version