சினிமா

அனபெல் சேதுபதி: திரைப்பட விமர்சனம்

Published

on

பழம்பெரும் இயக்குனர் ஆர் சுந்தரராஜன் மகன் தீபக் சுந்தர்ராஜனின் முதல் திரைப்படமான அனபெல் சேதுபதி என்ற படத்தின் விமர்சனத்தை இப்போது பார்ப்போம்.

அரண்மனை ஒன்றில் ஒரு கூட்டமாக பேய்கள் சிக்கியுள்ளன. அந்த பேய்கள் அங்கிருந்து வெளியேற வேண்டுமானால் அந்த அரண்மனைக்குள் புதிதாக வருபவர் சமைத்து சாப்பிட்டு உயிரோடு இருக்க வேண்டும் என்ற சாபம் உள்ளது. அதனால் தங்களை விடுவிக்க யாராவது வர மாட்டார்களா என்று அந்த அரண்மனையில் உள்ள பேய்கள் த்திருக்கின்றன.

இந்த நிலையில் டாப்ஸி அந்த அரண்மனையை கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காக தனது குடும்பத்துடன் வருகிறார். அவர் வந்த பிறகு அந்த பேய்களுக்கு விடுதலை கிடைத்ததா? டாப்சி கொள்ளையடித்தாரா? டாப்சி உண்மையில் யார்? விஜய் சேதுபதிக்கும் டாப்சிக்கும் என்ன சம்பந்தம்? என்பது தான் இந்த படத்தின் முழு கதை.

விஜய்சேதுபதி படம் தொடங்கி ஒரு மணி நேரம் கழித்தும், அதன் பின்னர் கிளைமாக்ஸில் ஐந்து நிமிடங்களும் வருகிறார். அதனால் இந்த படம் விஜய்சேதுபதி படம் என நினைத்து யாரும் ஏமாற வேண்டாம். படத்தை முழுக்க முழுக்க ஆக்கிரமிப்பது டாப்சி தான் என்பதும் அவருடைய கேரக்டரை சுற்றியே கதை நகர்கிறது. ஆனால் டாப்சியின் கேரக்டரும் சொதப்பலாக இருப்பதால் ஒரு திறமையான நடிகையை வீணடித்துள்ளனர்.

அரண்மனையை ஆட்டையை போட வேண்டும் என்று டாப்சியும், பிளாஷ்பேக்கிலும் அரண்மனையை ஆட்டையை போட வேண்டும் என ஜெகபதிபாபுவும் இருக்கின்றனர். பேய்கள் கூட்டம் மற்றும் கொள்ளையடிக்கும் கூட்டம் என காமெடியில் கலக்க அதிகமான வாய்ப்பு இருந்தும் ஒரு இடத்தில் கூட காமெடி உருப்படியாக இல்லை என்பது வருந்தத்தக்க ஒரு அம்சமாக உள்ளது. யோகிபாபு இதேபோல் ஒரு ஐந்து படத்தில் நடித்தால் மார்க்கெட்டை இழந்துவிடுவார். தேவதர்ஷினி, மதுமிதா, ஜெகபதிபாபு, சுரேஷ்மேனன், ராதிகா, சுப்பு பஞ்சு என அனைத்து நல்ல நட்சத்திரங்களையும் இயக்குனர் வீணடித்துள்ளார்.

தீபக் சுந்தரராஜனின் திரைக்கதையில் ஆரம்பம் முதல் கடைசி வரை சொதப்பலாக தான் உள்ளது. பேய் படம் என்றால் ஒன்று ஹாலிவுட் படம் போல் பயம் வரவேண்டும். அல்லது ராகவா லாரன்ஸ் படம் போல் காமெடியாக இருக்கவேண்டும். இந்த படத்தில் இரண்டுமே மிஸ்ஸிங் என்பதால் படத்தை பார்ப்பவர்கள் பொறுமை சோதிக்கப்படுகிறது என்றுதான் கூறவேண்டும்.

விஜய்சேதுபதியின் காட்சிகள் மட்டும் ஓரளவுக்கு திருப்தியாக உள்ளது என்பது ஒரு ஆறுதல். கிருஷ்ணா கிஷோரின் இசையில் பாடல்கள் கேட்கும் வகையில் இல்லை. பின்னணி இசையும் திரைக்கதை போலவே உள்ளது. இந்த படத்தின் ஒரே நல்ல அம்சம் ஒளிப்பதிவுதான். ஒளிப்பதிவாளர் கவுதம் ஜார்ஜ், அழகிய அரண்மனையை வளைத்து வளைத்து தனது கேமராவில் படம் பிடித்திருக்கிறார். ஒளிப்பதிவாளருக்கு மட்டும் நமது வாழ்த்துக்கள்.

2.0/5

seithichurul

Trending

Exit mobile version