தமிழ்நாடு

அடுத்த முதல்வர் விஜய் தான்: வேட்புமனு தாக்கல் செய்த ரசிகர்கள் ஆரவாரம்!

Published

on

தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் விஜய் ரசிகர்கள் போட்டியிட விஜய் ரசிகர் மன்றத்தின் தலைமை அனுமதி அளித்த நிலையில் பெரும்பாலான இடங்களில் விஜய் ரசிகர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்ற நிலையில் நேற்று ஏராளமான விஜய் ரசிகர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளரை ஆதரித்து நூற்றுக்கும் அதிகமான விஜய் ரசிகர்கள் திரண்டு வந்தனர் என்பதும், அப்போது விஜய் ரசிகர் மன்றம் கொடியைப் பிடித்துக்கொண்டு விஜய் தான் அடுத்த முதல்வர் என கோஷங்கள் எழுப்பி ஆரவாரம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடக்கும் ஒன்பது மாவட்டங்களிலும் விஜய் ரசிகர்கள் போட்டியிட்டு இருப்பதாக அகில இந்திய விஜய் ரசிகர் மன்றத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் மேற்கு ஒன்றியம் வடக்குப்பட்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு விஜய் ரசிகர் மன்றத்தின் வேட்பாளராக தமிழ்ச்செல்வன் என்பவர் போட்டியிடுகிறார்.

இவர் நேற்று காஞ்சி மாவட்ட தலைவர் தென்னரசு தலைமையில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது அவரை ஆதரித்து நூற்றுக்கும் மேலான விஜய் ரசிகர்கள் பேருந்து நிலையத்திலிருந்து விஜய் ரசிகர் மன்றம் கொடியை பிடித்தவாறு விஜய் குறித்த கோஷங்களை எழுப்பிக் கொண்டு பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த விஜய் ரசிகர்கள் சிலர் அடுத்த முதல்வர் விஜய் தான் என திடீரென கோஷமிட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் கிடைக்கும் வெற்றியை பொறுத்து பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலிலும் விஜய் ரசிகர்கள் களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version