சினிமா செய்திகள்

‘நீங்க வந்து ‘மாஸ்டர்’ முதல் ஷோ பாருங்க விஜய்’- தியேட்டர்களின் 100% உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு!

Published

on

பொங்கல் விழா அன்று, விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ மற்றும் சிம்பு நடிப்பில் ‘ஈஸ்வரன்’ திரைப்படங்கள் வெளியாக உள்ளன. கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த சினிமா தியேட்டர்களை, நவம்பர் மாதம் திறந்து கொள்ள அனுமதி கொடுத்தது தமிழக அரசு. அதே நேரத்தில் திரையரங்குகளில், 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அந்தக் கட்டுப்பாட்டை தற்போது நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. இதற்கு விஜய் ரசிகர்களும், சினிமா துறையினரும் மகிழ்ச்சி அடைந்திருந்தாலும், கொரோனா தொற்றுப் பரவல் இன்னும் அதிகமாக இருக்கும் நேரத்தில் இந்த உத்தரவு தேவைதானா என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளன. குறிப்பாக உருமாறிய கொரோனா சென்னை உள்ளிட்ட நகரங்களில் தொடர்ந்து அதிவேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இதனால், இந்த புதிய தளர்வுக்கு எதிராக எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக சில நெட்டிசன்கள், ‘100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படலாம் என்று கூறியது சரி என்றே வைத்துக் கொள்வோம். விஜய்யோ அல்லது அவரது குடும்பத்தினரோ படத்தை தியேட்டரில் வந்து பார்ப்பார்களா? குறிப்பாக விஜய் படங்களுக்கு முதல் சில நாட்களில் அவரது ரசிகர்கள் கூட்டம், தியேட்டரில் அலை மோதும். அந்த நேரத்தில் எந்தவித கொரோனா முன்னெச்சரிக்கையும் பின்பற்றப்படாது. அப்படியான நேரத்தில் தொற்று பாதிப்பு இருக்கும் நபர் ஒருவரால், ஒரே நேரத்தில் பலருக்கு கொரோனா பரவாதா? விஜய், ரசிகர்களுடன் அமர்ந்து முதல் நாள், முதல் ஷோ பார்ப்பாரா?’ என்று பலரும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

கொரோனா காலத்தில் தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் விமர்சித்து வந்த திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், இந்த விவகாரத்தில் மக்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்று, 100 சதவீத இருக்கைகளை நிரப்பிக் கொள்ளும் உத்தரவுக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில், திரைத் துறைக்கு எதிராக நிலைப்பாடு எடுத்தால், அதை சினிமா ரசிகர்களின் வாக்கு வங்கியை பாதிக்கும் என்ற அச்சத்தில் அரசியல் கட்சிகள் இருப்பதாக தெரிகிறது.

சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விஜய், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, தியேட்டர்கள் முழுவதுமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அடுத்த சில நாட்களிலேயே தமிழக அரசிடமிருந்து இப்படியான உத்தரவு வந்துள்ளதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்

இந்த உத்தரவு குறித்து நடிகர் சிம்பு, ‘எங்களது கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்த, தமிழ் திரையுலகிற்கு நம்பிக்கை ஒளியை ஏற்றி வைத்த மாண்புமிகு தமிழக முதல்வருக்கு நன்றி!’ என்றுள்ளார். சிம்பு மீதும் விஜய் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.

Trending

Exit mobile version