தமிழ்நாடு

‘எத்தனை தொகுதிகள் கொடுத்தாலும் ஓகே தாங்க..!’- திமுக கூட்டணி குறித்து வேல்முருகன் ஓப்பன் டாக்

Published

on

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், இன்று சென்னை, தேனாம்பேட்டையில் அமைந்துள்ள திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்தார். அங்கு அவர் திமுகவின் உயர்மட்ட நிர்வாகிகளோடு தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், ‘தற்போது தமிழகத்தில் ஆட்சி புரிந்து வரும் அதிமுக அரசு அகற்றப்பட வேண்டும். பாசிச பாஜக ஆட்சி அதிகாரத்தில் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். திமுகவிடம் நாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளைக் கேட்டிருக்கிறோம். அவர்கள் எத்தனை தொகுதி ஒதுக்கித் தந்தாலும் எங்களுக்கு மகிழ்ச்சியே. அதிமுக – பாஜக அரசு அகற்றப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்.

இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. இந்தக் கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்யும். திமுக தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும். இந்தத் தேர்தலிலும் நாங்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட இருக்கிறோம்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது, ஏற்கெனவே இருந்த இட ஒதுக்கீட்டு முறையையும் உரிமைகளையும் பாதிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. தமிழகம் முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அமல் செய்ய வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை. திமுக ஆட்சியில் பொறுப்பேற்றவுடன் அந்த விஷயத்தைச் செய்யும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்குத் திமுக, இரண்டு தொகுதிகளை ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

 

Trending

Exit mobile version