தமிழ்நாடு

வேலூர் மக்களவை தேர்தல் ரத்து?: தேர்தல் ஆணையம் தீவிரம்!

Published

on

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆணந்த் வீடு மற்றும் அவருக்கு வேண்டியவர்களின் இடங்களில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து அந்த தொகுதியில் தேர்தலை நிறுத்த தேர்தல் ஆணையம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

வேலூர் திமுக வேட்பாளர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் நடத்திய வருமான வரித்துறை சோதனை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் கைபற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம் மற்றும் வெளியான வீடியோக்கள் தமிழக தேர்தல் களத்தை சூடாக்கியுள்ளது. இந்நிலையில் வேலூர் தொகுதி மக்களவை தேர்தலையும், அந்த தொகுதிக்குட்பட்ட இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. தற்போது அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, வேலூரில் துரைமுரகன் வீடு மற்றும் நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக ஒரு அறிக்கையை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் கைப்பற்றப்பட்ட பணம் அனைத்தும் வாக்காளர்களுக்கு விநியோகிக்க இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

வருமான வரித்துறையும் இதுபோன்ற ஒரு அறிக்கையை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது. இதனையடுத்து வரும் திங்கள் காலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதில் வேலூர் மக்களவை தொகுதியின் தேர்தல் ரத்து என்ற அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

seithichurul

Trending

Exit mobile version