தமிழ்நாடு

வேலூர் மக்களவை தேர்தலில் திமுகவின் கதிர் ஆனந்த் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

Published

on

வேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. இதில் முதலில் அதிமுக வேட்பாள ஏசி சண்முகம் முன்னிலை பெற்றாலும் அவரை துரத்தி சென்று பின்னுக்கு தள்ளினார் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த். கடும் இழுபறிக்கு பின்னர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வேலூர் மக்களவை தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.

வேலூர் மக்களவை தேர்தல் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது. அதில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் கதிர் ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பாக தீபலட்சுமி என 28 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். இதில் பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணி முதல் தொடர்ந்து எண்ணப்பட்டு வந்தது.

10 லட்சம் வாக்குகள் பதிவான இந்த தேர்தலில் தொடக்கத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகமே தொடர்ந்து முன்னிலை வகித்துவந்தார். ஆனால் இந்த முன்னிலை 3000 வாக்குகள் வித்தியாசத்திலேயே நீடித்து வந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் இந்த முன்னிலை குறைந்து திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற ஆரம்பித்தார்.

இதனால் வாக்கு எண்ணிக்கையில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. படிப்படியாக முன்னிலை எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்ட கதிர் ஆனந்த் தொடர்ந்து முன்னிலையில் நீடித்தார். 10 ஆயிரம், 11 ஆயிரம் என முன்னிலை நீடித்து வந்ததால் முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்ற பதற்ற சூழல் நீடித்தது. ஆனால் இறுதியில் திமுகவின் கதிர் ஆனந்த் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

திமுகவின் கதிர் ஆனந்த் 485340 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 477199 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் தீப லட்சுமி 26995 வாக்குகளும் பெற்றனர்.

Trending

Exit mobile version