கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சென்னையில் தற்கொலை!

Published

on

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் வி.பி. சந்திரசேகர் நேற்று மாலை தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். 57 வயதான வி.பி.சந்திரசேகர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

1988 டிசம்பர் 10-ஆம் தேதி வைசாக்கில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவுக்காக விளையாடிய வி.பி.சந்திரசேகர் மொத்தம் 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 88 ரன்கள் எடுத்துள்ளார். 81 முதல் தர போட்டிகளில் 4999 ரன்கள் எடுத்த அவர் அதிகபட்சமாக 237 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார். ஓய்வுக்குப் பின், தமிழக அணிக்கு பயிற்சியாளராகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மேலாளராகவும் இவர் பணியாற்றி உள்ளார்.

தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருந்து வந்தார். சென்னை மயிலாப்பூரில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் வி.பி.சந்திரசேகர், நேற்று மாலை 5.45 மணிக்கு டீ அருந்திவிட்டு, தனது அறைக்குள் சென்று வெகுநேரமாகியும் வெளியே வராததால், கதவை உடைத்து குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது வி.பி.சந்திரசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதல் கட்ட விசாரணையில், கடன் நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் வி.பி.சந்திரசேகர் மறைவிற்கு சச்சின், சுரேஷ் ரெய்னா, முகமது கைஃப் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version