சினிமா

வைரமுத்துவின் காமவெறி: டுவிட்டரில் தெறிக்கவிடும் சின்மயி!

Published

on

பிரபல கவிஞர், பல தேசிய விருதுகளை வென்ற பாடலாசிரியர் வைரமுத்து குறித்தான பாலியல் குற்றச்சாட்டுகளை டுவிட்டரில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் பாடகி சின்மயி.

முன்னதாக பெண் ஒருவர் வைரமுத்து மீது வைத்த பாலியல் குற்றச்சாட்டை ரீடுவீட் செய்து பரபரப்பை கிளப்பிய சின்மயி தற்போது வைரமுத்துவால் தனக்கு நேர்ந்ததை டுவிட்டரில் தெரிவித்து வைரமுத்துவின் முகத்திரையை கிழித்துள்ளார். முன்னதாக வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் என டுவிட்டரில் பலரும் சினமியிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த சின்மயி, நானே ஆதாரம். இதோ நானே சொல்கிறேன். 2005 அல்லது 2006-ஆம் ஆண்டாக இருக்கும். வீழ மாட்டோம் என்ற ஆல்பம் ஒன்றை இலங்கை தமிழர்களுக்கு மாணிக்க விநாயகம் அவர்களுடன் பாடுவதற்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்தோம். அது புத்தகமா அல்லது பாடல் வெளியீடா என்று தெரியவில்லை. ஆனால், அதன் வெளியீட்டுக்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்தோம். இங்கு பாடல் ரெகார்டிங் முடித்துவிட்டு, சுவிட்சர்லாந்து சென்று லைவ்வாகப் பாடியும் கொடுத்தேன்.

எல்லோரும் கிளம்பிய பிறகும், நானும் என் அம்மாவும் மட்டும் அங்கேயே இருக்க வேண்டும் எனச் சொன்னார்கள். விழா ஏற்பாட்டாளர் வந்து, நீங்கள் மட்டும் வைரமுத்துவை அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்று பார்க்கச் சொன்னார். நான் ஏன் என்று கேட்டதற்கு, கொஞ்சம் ஒத்துழையுங்கள் என்று சொன்னார். நான் மறுத்துவிட்டு, இந்தியாவுக்கு உடனே செல்ல ஏற்பாடு செய்யச் சொன்னேன்.

எனது எதிர்காலமே பாதிக்கப்படும் என்று அவர் சொன்னார். அதற்கு, நானும் என் அம்மாவும் எழுந்து நின்று எதிர்காலமும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம் என்று சொல்லி, எந்த விமானம் சீக்கிரமாக இருக்கிறதோ, அதிலேயே இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் என அழுத்தம் திருத்தமாகச் சொல்லி இந்தியா வந்தடைந்தோம்.

கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புத்தக வெளியீடு வைத்திருந்தார் வைரமுத்து. அந்த விழாவுக்கு வந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று என்னிடம் கேட்டார். என்னால் முடியாது என்று சொன்னதும், விழாவுக்கு வரப்போகும் அரசியல்வாதியைப் பற்றி நீ தவறாக மேடையில் பேசினாய் என்று நான் சொல்லுவேன் என மிரட்டி திட்டிவிட்டு போனை கட் செய்துவிட்டார். இதனால் நான் கதறி அழுவதைப் பார்த்த என் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் எனக்கு ஆறுதல் சொல்லி தைரியமும் கொடுத்தார்கள்.

அதன் பின்னர் வைரமுத்துவின் மேனேஜரை அழைத்து அவர் சொன்ன அதே அரசியல்வாதியிடம் நான் அவரைப் பற்றி பேசியதாகச் சொல்லப்படுவது அத்தனையும் பொய். ஏனென்றால், இதுவரை நான் எந்த மேடையிலும் பேசியதில்லை எனச் சொல்வேன். அதை அவர் கண்டிப்பாக நம்புவார் எனக் கூறினேன்.

வைரமுத்துவின் இந்த பாலியல் மிரட்டல்கள் குறித்து சின்மயி டுவிட்டரில் தொடர்ந்து கூறிவருகிறார். அதுமட்டுமல்லாமல் மேலும் பலரின் பாலியல் தொந்தரவுகளையும் அம்பலப்படுத்தி வருகிறார் சின்மயி. அவருக்கு பலதரப்பில் இருந்தும் ஆதரவு தற்போது வர ஆரம்பித்துள்ளது. இந்த விவகாரம் தமிழ் சினிமா உலகில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. நல்லவர்களாக வெளியில் நடமாடும் பலரது முகத்திரையையும் இந்த டுவிட்டர் பதிவுகள் கிழித்து வருகின்றன.

Trending

Exit mobile version