தமிழ்நாடு

வைகோவின் வேட்புமனு ஏற்பு: மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார்!

Published

on

தேசதுரோக வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

கடந்த மக்களவை தேர்தலின் போது மதிமுகவுக்கு ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்படும் என திமுக உடன்படிக்கை செய்துகொண்டது. அதன்படி திமுக அளித்த ஒரு ராஜ்யசபா உறுப்பினர் வாய்ப்பின் மூலம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராளுமன்றத்துக்கு செல்ல முயன்றார்.

இந்நிலையில் வைகோவுக்கு தேசதுரோக வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வந்ததால் அவருக்கு ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவர் எம்பி ஆவதில் சிக்கல் ஏற்படுமா என குழப்பமான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் வைகோ தலைமைச் செயலகத்தில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது மனுவை சில தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் தேர்தலில் போட்டியிடும் தகுதி உள்ளதா என்பது வருகிற ஜூலை 9-ஆம் தேதி தெரியவரும் என்றார். இதனையடுத்து வைகோவின் வேட்புமனு ஒருவேளை நிராகரிக்கப்பட்டால், அதற்கு மாற்று ஏற்பாட்டாக திமுக தனது வேட்பாளரை களமிறக்கியுள்ளது. வைகோவின் வேட்புமனு ஒருவேளை ஏற்றுக்கொள்ளப்பட்டால், திமுக வேட்பாளர் தனது வேட்புமனுவை திரும்ப பெற்றுக்கொள்வார் என்று வைகோ விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் இன்று வேட்புமனு பரிசீலனையில் வைகோவின் மனுவை ஏற்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது மதிமுக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. சில நாட்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பமும் இதனால் முடிவுக்கு வந்துள்ளது. இதன் மூலம் வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆவது உறுதியாகியுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version