தமிழ்நாடு

வைகோவின் சிறைதண்டனை நிறுத்தி வைப்பு: மேல்முறையீட்டில் நீதிமன்றம் அதிரடி!

Published

on

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேசத்துரோக வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணையில் இன்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.

அதில் வைகோ குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் நீதிபதி சாந்தி தீர்ப்பு அளித்தார். அதில் வைகோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய விரும்புவதாகவும், தண்டனையை நிறுத்தி வைக்குமாறும் வைகோ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வைகோ மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக சிறை தண்டனையை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன்னர் வைகோ மேல்முறையீடு செய்தார். அதில், எனக்கு எதிராக நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சட்டவிரோதமானது. சட்டப்படி தீர்ப்பினை வழங்காமல் சிறப்பு நீதிமன்றம் தனக்கு தெரிந்த விஷயங்களை மட்டும் வைத்து வழங்கியுள்ளது. எனக்கு எதிரான குற்றச்சாட்டில் முழுமையான ஆதாரம், சாட்சியங்கள் இல்லாத நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே எனக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த ஓராண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோவின் மேல்முறையீட்டு மனு மீது ஆயிரம்விளக்கு காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, இந்தியாவின் ஒருமைப்பாடு பாதிக்காத வகையில் சிந்தித்து பேசவேண்டும் என அறிவுறுத்தி, இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடியும்வரை வைகோவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.

Trending

Exit mobile version