தமிழ்நாடு

ஹிரோஷிமா, நாகசாகி போல நியூட்ரினோவால் தமிழகத்துக்கு காத்திருக்கும் பேராபத்து: மாநிலங்களவையில் வைகோ!

Published

on

தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தினால் நாகசாகி, ஹிரோஷிமா போல எதிரி நாடுகளின் தாக்குதலுக்கு தமிழகம் உள்ளாகும் பேராபத்து உள்ளதாக மதிமுக எம்பி வைகோ மாநிலங்களவையில் இன்று பேசியுள்ளார்.

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரம் அம்பரப்பர் மலைப்பகுதியில் 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு சமீபத்தில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில் இதனை கடந்த 11-ஆம் தேதி தெரிவித்தார்.

இந்த பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதினால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும் என தேனி சுற்றுவட்டார பகுதியினரும், அரசியல் கட்சிகளும், சூழலியல் அமைப்புகளும் தொடர்ந்து போராடி வருகின்றன. இதனை எதிர்த்து பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்த திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நியூட்ரினோ திட்டத்தால் உலகின் தொன்மையான கடினப் பாறைகள் நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் மிகக் கடுமையான சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு ஏற்பட இருக்கின்றது. நியூட்ரினோ ஆய்வு மையம் செயல்படவுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியை உலக பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்து இருக்கின்றது.

இங்கே சுரங்கம் தோண்டும் போது, 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கேரளா மாநிலத்தின் மிகப்பெரிய இடுக்கி அணை உடைந்து நொறுங்கும். அதேபோல முல்லைப் பெரியாறு அணையும் உடைந்து நொறுங்கும். நியூட்ரான் மற்றும் நியூட்ரினோ இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நான் அறிவேன். நியூட்ரினோ திட்டம் அமைய இருக்கின்ற இடத்தில் இருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவில் கேரள எல்லை தொடங்குகின்றது. அங்கே மதிகெட்டான் சோலை காடுகள் உள்ளன. இவை பாதுகாக்கப்பட்ட காடுகளாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த நியூட்ரினோ திட்டத்தின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று, உலகின் எந்த இடத்திலும் உள்ள அணுகுண்டுகளை செயல் இழக்கச் செய்வதாகும். இதனால் நாகசாகி, ஹிரோஷிமா போல எதிரி நாடுகளின் முதன்மையான தாக்குதல் மையமாகத் தமிழ்நாடு ஆகிவிடும் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது எனவே நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் அவர்.

seithichurul

Trending

Exit mobile version