தமிழ்நாடு

வைகோவுக்கு பதிலாக திமுக வேட்பாளரை நிறுத்தியதின் பின்னணி என்ன? பரபரப்பு தகவல்!

Published

on

தேசதுரோக வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டால் அவருக்கு பதிலாக திமுகவை சேர்ந்த என்.ஆர்.இளங்கோ போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டால் அவருக்கு பதிலாக மதிமுகவை சேர்ந்த வேறொருவர் தானே மாற்று வேட்பாளராக களமிறக்கப்படனும். ஏன் திமுகவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவை மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தார் என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளது. மதிமுக, திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுவிட்டதா போன்ற சந்தேக கேள்விகளும் எழும்புகிறது.

இந்நிலையில் இந்த குழப்பத்துக்கு பதிலளிக்கும் விதமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மக்களவைத் தேர்தல் உடன்படிக்கை ஏற்பட்டபோதே எனக்கும் ஸ்டாலினுக்கு இடையே ஓர் எழுதப்படாத ஒப்பந்தம் ஏற்பட்டது. மாநிலங்களவைக்கு மதிமுக சார்பில் நீங்கள் செல்வதாக இருந்தால் மதிமுகவில் ஒரு மாநிலங்களவை இடம் தருகிறோம் என்று ஸ்டாலின் கூறினார்.

மதிமுக தொண்டர்கள் நான் மாநிலங்களவைக்கு செல்ல வேண்டும் என்று விரும்பியதால், நானும் அதற்கு ஒப்புக்கொண்டேன். இந்நிலையில்தான் என் மீது தொடுக்கப்பட்ட தேச துரோக வழக்கின் தீர்ப்புக்கு முன்பே ஸ்டாலினை சந்தித்த நான், இந்தத் தீர்ப்பால் நான் மாநிலங்களவைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டால் மாற்று ஏற்பாடுகளை நீங்கள் செய்துகொள்வது நல்லது என்று வலியுறுத்தினேன்.

அதன் அடிப்படையிலேயே திமுகவைச் சேர்ந்த என்.ஆர். இளங்கோ நான்காவது வேட்பாளராக இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட வாய்ப்பே இல்லை. பரிசீலனையின் போது என் மனு ஏற்கப்படும். அப்படி ஏற்கப்பட்டால் திமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த என்.ஆர். இளங்கோ மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வார். இதுதான் ஏற்பாடு என்றார்.

seithichurul

Trending

Exit mobile version