தமிழ்நாடு

தேசதுரோக வழக்கில் குற்றவாளி: வைகோ ராஜ்யசபா எம்பியாக முடியுமா?

Published

on

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேசதுரோக வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் ராஜ்யசபா எம்பியாக முடியுமா என சந்தேகம் எழுந்துள்ளது. வைகோ மதிமுக சார்பில் திமுக அளித்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இந்த தீர்ப்பு வெளியாகி உள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. இதில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், வைகோ குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தண்டனையை இன்றே வழங்குமாறு வைகோ கோரிக்கை வைத்தார். அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளது.

ஆனால் வைகோ ராஜ்யசபா உறுப்பினர் ஆவதில் சிக்கல் இல்லை என மதிமுக வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வருகின்றன. இரண்டு வருடங்களுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால்தான் வகிக்கும் பதவியை இழக்கும் நிலையோ, தேர்தலில் போட்டியிட முடியாத நிலையோ ஏற்படும். ஆனால் வைகோவுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டிருப்பதால் ராஜ்யசபாவுக்கு அவர் செல்வதில் எந்த சிக்கலும் இருக்காது. வேட்பு மனு தாக்கலில் இந்த வழக்கு விவரத்தையும் சேர்க்க வேண்டும் அவ்வளவுதான் என்கிறார்கள்.

மேலும் ஆங்கிலப் புத்தக வெளியீட்டு விழாவில் பேசியதற்கு எதிரான வழக்கில் இருந்து வைகோ ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருக்கிறார். எனவே தமிழ் மொழி பெயர்ப்பு வெளியீட்டு விழாவில் பேசியதற்காக தண்டிக்கப்பட்டது சரியானது அல்ல என்பது மேல் முறையீட்டில் உறுதிப்படுத்தப்படும். எனவே வைகோவுக்கு இந்தத் தீர்ப்பு பாதகத்தை ஏற்படுத்தாது என மதிமுகவினர் கூறுகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version