தமிழ்நாடு

மன்னிப்பு மட்டும் கேட்கமாட்டேன், மனதில் விஷம் நிறைந்திருக்கிறது: வைகோ காட்டம்!

Published

on

தேசத்துரோக வழக்கில் மேல்முறையீடு செய்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனக்கு ஆயுள் தண்டனை கொடுத்தாலும் ஏற்பேன், மன்னிப்பு மட்டும் கேட்க மாட்டேன் என செய்தியாளர் சந்திப்பில் காட்டமாக தெரிவித்துள்ளார்.

எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் வைகோ மீதான தேசதுரோக வழக்கை விசாரித்து சில தினங்களுக்கு முன்னர் தீர்ப்பு வழங்கியது. அதில் வைகோ குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய விரும்புவதாகவும், தண்டனையை நிறுத்தி வைக்குமாறும் வைகோ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வைகோ மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக சிறை தண்டனையை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ சில தினங்களுக்கு முன்னர் மேல்முறையீடு செய்தார். அதில், சிறப்பு நீதிமன்றம் அளித்த ஓராண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வைகோவிடம், தேசத்துரோக வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது ஏன்? என ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதனால் கோபமடைந்த வைகோ, தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யமாட்டேன் என்று கூறினேனா? மேல்முறையீடு செய்ததில் எனக்கு ஆயுள் தண்டனையே கொடுத்தாலும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன். மன்னிப்பு மட்டும் கேட்கமாட்டேன். விடுதலைப் புலிகளை ஆதரிப்பேன் என்று சொல்லியுள்ளேன். அத்தனை ஊடகங்களும் என்னை பாராட்டிக்கொண்டிருக்கின்றன. ஆனால், நீங்கள் என்னிடம் மேல்முறையீடு ஏன் செய்தீர்கள் என்று கேட்கிறீர்கள். நீதிபதியின் மனதில் விஷமில்லை. உங்களுடைய மனதில் விஷம் நிறைந்திருக்கிறது என்றார் ஆவேசமாக.

seithichurul

Trending

Exit mobile version