தமிழ்நாடு

வைகோ-அழகிரி காரசார மோதல்: பஞ்சாயத்து நடத்தி முற்றுப்புள்ளி வைத்த ஸ்டாலின்!

Published

on

காஷ்மீர் விவகாரத்தில் மாநிலங்களவையில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து ஒரு பிடி பிடித்தார். இது தமிழக மற்றும் தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வைகோவை கடுமையான வார்த்தைகளால் கடும் விமர்சனம் செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மேலும் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் தனது பங்கிற்கு வைகோவை கடுமையாக விமர்சித்தார்.

இதனையடுத்து இவர்களின் விமர்சனங்களுக்கு வைகோவும் தனது பாணியில் காங்கிரஸுக்கு கடுமையான பதிலடி கொடுத்து மோதலுக்கு எண்ணெய் ஊற்றி எரிய வைத்தார். உடனே ஊடகங்கள் திமுக கூட்டணியில் விரிசல் என விவாதம் செய்ய ஆரம்பித்தன. இந்த சூழ்நிலையில் காஷ்மீர் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டிய திமுக தலைவர் ஸ்டாலின் பின்னர் வைகோவை தனியாக அழைத்து பஞ்சாயத்து நடத்தியுள்ளார்.

வைகோவிடம் கூட்டணி உடையக்கூடாது போன்ற சில விஷயங்களை சொல்லி சமாதானப்படுத்தி பிரச்சனையை இத்தோடு முடித்துக்கொள்ளுங்கள் என சமாதானம் செய்துள்ளார். அத்தோடு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு போன் போட்டு பேசிய ஸ்டாலின் வைகோ விவகாரத்தை இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என அறிவுறுத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

இந்த பின்னணியில் தான் கே.எஸ்.அழகிரி டெல்லியில் இருந்து சென்னை வந்தபோது மீண்டும் வைகோ பற்றி கேள்விகள் எழுந்தபோது சிரித்தவாறே கே.எஸ். அழகிரி, அவரும் பேசினார். நாங்களும் பேசினோம். அத்தோடு அந்த எபிசோடு முடிந்துவிட்டது என்று முற்றுப்புள்ளி வைத்தார்.

seithichurul

Trending

Exit mobile version