இந்தியா

தடுப்பூசிக்குத் திண்டாடும் இந்தியா; மத்திய அரசு என்ன செய்கிறது? டிரெண்ட் ஆன ‘#Vaccine_enga_da_dei’

Published

on

நாட்டில் இன்று முதல் 18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் அது நடைமுறைக்கு வருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தடுப்பூசிகள் கிடைப்பதில் நிலவும் தட்டுப்பாடு மற்றும் குழப்பங்கள் காரணமாக இப்படியான சந்தேகம் எழுந்துள்ளது.

தடுப்பூசி செலுத்துவது குறித்து இந்த வாரத் தொடக்கத்தில் தமிழக அரசு வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில் கூறியிருந்ததாவது:

இந்தியாவிலேயே அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடு. கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தமிழ்நாடு அரசால் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் இலவச தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 55.51 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், வரும் மே 1 ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தவாறு, இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் தேவையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கென, முதல் கட்டமாக 1.50 கோடி தடுப்பூசிகள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்து வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு தமிழகத்தில் இன்று முதல் தடுப்பூசி போடப்படுமா என்பது குறித்து மாநில சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ‘மத்திய அரசின் இணையதளத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு செய்திருந்தால், அது குறித்து மத்திய அரசுத் தரப்பு தான் விளக்கம் கொடுக்க வேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை நாம் ஒன்றரை கோடி தடுப்பூசி டோஸ்களுக்கு ஆர்டர் கொடுத்து விட்டோம். ஆனால், இதுவரை தடுப்பூசிகள் நமக்கு எப்போது கிடைக்கும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து நமக்கு எந்த வித தகவல்களும் வரவில்லை. தடுப்பூசி நம் கைகளுக்கு கிடைக்கும் பட்சத்தில் தான் அதை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த முடியும். அதே நேரத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி நம்மிடம் கையிருப்பில் இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

இப்படி தடுப்பூசிக்கு நிலவும் பற்றாக்குறை குறித்து நடிகர் சித்தார்த், ‘வாக்ஸின் எங்கடா டேய்’ என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவை ஒட்டி, ‘#Vaccine_enga_da_dei’ டிரெண்ட் ஆகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version