இந்தியா

மொத்தமாக நம்பிக்கை இழந்துவிட்டனர்.. கடைசி நேரத்தில் நிகழ்ந்த அற்புதம்.. 12 பேரின் உயிரை காப்பாற்றிய ஒரு போன் கால்!

Published

on

உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறை வெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் சிக்கியிருந்த நிலையில் அவர்களில் ஒரு பகுயில் இருந்த 12 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது ஒரேயொரு போன் கால்.

உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் நேற்று மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று சரிந்து விழுந்தது. இதன் காரணமாக தவுலிகங்கா மற்றும் ரிஷிகங்கா ஆறுகளில் திடீரென்று பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் இரண்டு நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் அமைக்கப்பட்ட தபோவன் அணை முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டது. மேலும் மலரி பள்ளத்தாக்கின் அருகிலிருந்த இரண்டு பாலங்களும் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது

மத்திய அரசின் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் சார்பில் தபோவன் அணையின் குறுக்கே 520 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நீர்மின் நிலைய கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 170 பேரின் நிலை என்ன என்றே தெரியவில்லை. அவர்களை தொடர்புகொள்ளவும் முடியவில்லை என்றும் கட்டுமான பணியை மேற்கொண்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை 31 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலரை தேடும் பணிகள் முடுக்கிவிட பட்டுள்ளன.

இந்த நிலையில் தான் உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலியில் உள்ள தபோவனில் நிலத்தடி சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 12 பேர் அவர்களின் நம்பிக்கையை மொத்தமாக இழந்த நேரத்தில் ஒரேயொரு போன் கால் அவர்களின் உயிர்களை காப்பாற்றியுள்ளது. சுரங்கப்பாதையில் இருந்து உடனே வெளியேறுமாறு மக்கள் அலறிய சத்தம் எங்களுக்கு கேட்டது, ஆனால் அதற்கு நாங்கள் எதிர்வினையாற்றுவதற்குள் திடீரென தண்ணீர் மற்றும் கனமான மண் எங்கள் மீது விழுந்துவிட்டது என மீட்கப்பட்ட ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் மொத்தமாக நம்பிக்கையை இழந்துவிட்டோம். அதன் பின்னர் தான் சிறிது வெளிச்சத்தை கண்டோம், சுவாசிக்கவும் சிறிது காற்றை உணர முடிந்தது. அப்போதுதான் எங்களில் ஒருவர் அவருடைய செல்போனில் சிக்னல் இருப்பதை கண்டறிந்தார். உடனே எங்களுடைய பொது மேலாளரை தொடர்பு கொண்டு எங்கள் நிலைமையைப் பற்றி கூறினோம் அதன் பிறகே எங்களுக்கு உதவி கிடைத்தது என்று மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நபர் கூறியுள்ளார்.

அவர்களுடைய பொது மேலாளர் உடனடியாக உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் மூலம் இந்தோ திபத் போலீஸ் படை வரவழைக்கப்பட்டு சுரங்கத்திற்குள் 30 மீட்டர் தொலைவுக்கு உள்ளே சிக்கியிருப்பவர்களை நேற்று மாலையில் இருந்து மீட்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மீட்கப்பட்டவர்கள் சம்பவ இடத்திலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள ஜோஷிமாத்தில் உள்ள ஐ.டி.பி.பி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளம் காரணமாக துண்டிக்கப்பட்டுள்ள குறைந்தது ஒன்பது கிராமங்களில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் உணவு பொட்டலங்களை ஹெலிகாப்டர் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

Trending

Exit mobile version