உலகம்

சிறைவைக்கப்பட்ட ஆங் சாங் சூகி.. களமிறங்கிய அமெரிக்கா.. இனிதான் ஆட்டமே இருக்கு!

Published

on

வாஷிங்டன் : மியான்மரில் ஆங் சாங் சூகி உள்ளிட்ட தலைவர்களை வீட்டு காவலில் அடைத்து, ராணுவ புரட்சி ஏற்பட்டதாக வெளியான தகவலை அடுத்து அமெரிக்கா இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது. சிறை வைக்கப்பட்ட தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகளை மாற்றும் எந்த ஒரு நடவடிக்கையையும் அமெரிக்கா எதிர்க்கிறது. மியான்மரின் ஜனநாயக நடவடிக்கைக்கு இடையூறு விளைவிக்கும் செயல் நடைபெறுகிறது. இந்த நிலைமை மாறாவிட்டால் இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.

மியான்மரில் என்ன நடக்கிறது?

பர்மா என்றழைக்கப்பட்ட மியான்மரில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவ ஆட்சி நடைபெற்றது. அங்கு ஜனநாயக ஆட்சி அமைய வேண்டும் என போராடியவர்களில் முக்கியமானவர் ஆங் சாங் சூகி.1988 ஆம் ஆண்டு நோய்வாய்பட்டிருந்த தன்னுடைய தாயை பார்ப்பதற்காக மியான்மர் வந்த ஆங் சாங் சூகி தானும் போராட்டத்தில் இறங்கினார். இதனால் ராணுவம் 1989 ஆம் ஆண்டு வீட்டு காவலில் சிறை வைத்தது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆங் சாங் சூகி சிறை வைக்கப்பட்டார். இடைப்பட்ட காலத்தில் 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 492 இடங்களில் சூகியின் என்.எல்.டி கட்சி 392 இடங்களை கைப்பற்றியது.ஆனாலும் ராணுவம் அப்போது பதவி விலக மறுத்துவிட்டது.

பின்னர் 20 ஆண்டுகளுக்கு பிறகு 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலை என்.எல்.டி கட்சி புறக்கணித்தது. கடைசியாக 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆங் சாங் சூகியின் என்.எல்.டி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஆனால் அடுத்த 4 ஆண்டுகளில் அந்த அரசு பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. குறிப்பாக ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீதான வன்முறை சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டிய நிலை உருவானது. இந்த வன்முறை மீது நடவடிக்கை எடுக்காத மியான்மர் அரசாங்கத்திற்கு பல உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இப்போது என்ன பிரச்னை ?

பின்னர் கடந்தாண்டு நவம்பர் மாதம் மீண்டும் நடைபெற்ற தேர்தலில் ஆங் சாங் சூகியின் என்.எல்.டி கட்சியே வெற்றி பெற்று இருந்தது. ஆனால் இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக ராணுவம் குற்றம் சாட்டியிருந்தது. இந்த நிலையில் தான் ராணுவம் சதி வேளையில் இறங்கி விட்டதாக தகவல் வெளியானது. ஆங் சாங் சூகி மற்றும் ஜனாதிபதி வின் மைன்ட் ஆகியோர் திங்கள்கிழமை விடியற்காலையில் தலைநகர் நெய்பிடாவில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று என்.எல்.டி கட்சியின் செய்தித் தொடர்பாளர் மியோ நியுண்ட் தெரிவித்துள்ளார். கடந்த வாரமே தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதால் என்எல்டியின் அதிகாரங்களை ராணுவம் கைப்பற்ற போவதாக சூசகமாக கூறியிருந்தது.

இந்த நிலையில் தான் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதாக வெளியான தகவலை ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. அடுத்த ஒரு வருடத்திற்கு மியான்மரில் அவசர நிலை பிரகடனபடுத்த பட்டுள்ளதாக ராணுவத்தின் சொந்த தொலைக்காட்சி சேனலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மாகாண முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களும் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

களமிறங்கிய உலக நாடுகள்:

ராணுவத்தின் இந்த திடீர் நடவடிக்கைக்கு ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிறைவைக்கப்பட்ட தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். ராணுவம் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முயல்வதாக ஆஸ்திரேலியா கூறியுள்ளது. சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளித்து, சட்டபூர்வமாக அணைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்றும் சிறை வைக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் பொதுமக்களை விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்று ஆஸ்திரேலியாவின் வெளியுறவு செயலாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு அமெரிக்கா தலையிடும் முதல் சர்வதேச பிரச்சனையாக இது பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆங் சாங் சூகி உள்ளிட்ட தலைவர்களை விடுதலை செய்து நிலைமைகள் சரியாகவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ராணுவமும், மற்ற அனைத்து கட்சிகளும் ஜனநாயக விதிமுறைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துவதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version