விமர்சனம்

தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் மாற்றம் ஏற்படுத்துமா? உறியடி 2 விமர்சனம்!

Published

on

கெமிக்கல் கம்பெனியிலிருந்து வெளிவரும் நச்சுப்புகையால், நூற்றுக்கணக்கான ஊர்மக்கள் இறக்கின்றனர். ஆலையை மூடாமல் செயல்பட உதவும் உள்ளூர் அரசியல்வாதிகள். இவர்களை எதிர்த்து போராடும் இளைஞர் லெனின் விஜய் கதாபாத்திரத்தில் விஜயகுமார் நடித்து இயக்கியுள்ள உறியடி 2 படம் எப்படி இருக்கு பார்ப்போமா..

கதைக்களம்:

கல்லூரி மாணவர்களின் வாழ்வில் சாதி அரசியல் செய்யும் விளைவுகளையும் அதனை எதிர்த்து போராடும் மாணவராக உறியடி முதல் பாகத்தை இயக்கி நடித்த விஜயகுமார் பலரது பாராட்டுக்களை பெற்றார்.

அந்த வெற்றி உறியடி 2 படத்தை இயக்கி நடிக்க அவருக்கு உதவி புரிந்தது. நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகி இன்று வெளியாகியிருக்கும் உறியடி 2 படத்தில், சந்தோஷமாக வாழவேண்டும் என்று நினைக்கும் சாதாரண இளைஞனாக லெனின் விஜய் எனும் கதாபாத்திரத்தில் விஜயகுமார் நடித்துள்ளார்.

ஊரில் செயல்பட்டு வரும் ஒரு கெமிக்கல் கம்பெனியில் விஜயகுமார் மற்றும் அவருடைய நண்பர்கள் வேலைக்கு சேர்கின்றனர். அந்த கெமிக்கல் நிறுவனத்தில் எதிர்பாராமல் நிகழும் விபத்தில் அவரது நண்பர் உயிரிழக்கிறார்.

மேலும், விஷ வாயு கசிவால், ஊரில் உள்ள பொதுமக்களும் உயிரிழக்கவே, இது நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடு என உயர் அதிகாரிகளிடம் முறையிடுகிறார்.

ஆனால், கம்பெனி முதலாளியோ புதிதாக தொடங்கிய காப்பர் கம்பெனி மீது கவனம் செலுத்துவதால், இந்த கெமிக்கல் கம்பெனியை சீர் செய்ய முன் வரவில்லை. மேலும், உள்ளூர் அரசியல்வாதிகள் அந்த கம்பெனியை நடத்த உறுதுணையாக இருக்கின்றனர்.

அப்பாவி மக்கள் தான் பணிபுரியும் கம்பெனியால் உயிரிழப்பதை கண்டித்து, போராட்டத்தில் குதிக்கும் நாயகன் அதில் ஜெயித்தாரா இல்லையா? என்பதே உறியடி 2 படத்தின் கதை.

உறியடி படத்தை விட உறியடி 2 படத்தில் இன்னும் மெருகேறியுள்ளார் ஹீரோ விஜயகுமார். நாயகி விஸ்மயாவுக்கு சிறிய போர்ஷன் என்றாலும், அந்த காதல் கதையையும் அழகாக வைத்துள்ளார்.

பரிதாபங்கள் பிரபலம் சுதாகர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

காதல் பாடல்களை போட்டு 96 படத்தில் நம்மைக் கட்டிப் போட்ட கோவிந்த் வசந்தா, உணர்ச்சி பொங்கும் பாடல் மற்றும் பின்னணி இசை அமைத்து தேவையான இடங்களில் கர்ஜித்துள்ளார்.

படத்தின் மைனஸ் என்ன வென்றால், சமூக பிரச்சனைக் குறித்த படமாக தொடங்கப்படும் உறியடி 2 படம் கடைசியாக தனி மனித பலி வாங்குதலாக முடிவது மிகப்பெரிய மைனஸாக அமைந்துள்ளது.

தேர்தல் நேரத்தில் வெளியாகி இருக்கும் உறியடி 2 படம் தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் ஏதாவது விளைவுகளை உண்டாக்குமா என்பது தேர்தலின் முடிவுக்கு பிறகே தெரியவரும்.

சினி ரேட்டிங்: 3.5/5.

Trending

Exit mobile version