இந்தியா

உத்தர பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி போட்டவர் பலி!

Published

on

உத்தர பிரதேச மாநிலத்தில், 46 வயதுடைய சுகாதார ஊழியருக்கு நேற்று முன் தினம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்ட 24 மணி நேரத்திற்குள் அந்த நபர் இறந்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

உத்தர பிரதேசத்தின் மொராதாபாத்தில் இருக்கும் மருத்துவமனையில் வார்டு பாயாக பணி செய்து வந்தவர் மகிபால் சிங். அவருக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இது குறித்து மொராதாபாத் தலைமை மருத்து அதிகாரி எம்.சி.கார்க் கூறுகையில், ‘சனிக்கிழமை அவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பின்னர், ஞாயிற்றுக் கிழமை மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. நெஞ்சு வலியும் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் இறந்துள்ளார். அவரது மரணத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை செய்து வருகிறோம். விரைவில் பிரேதப் பரிசோதனை முடிவு எங்கள் கைகளுக்கு வரும். அவர் தடுப்பூசி காரணமாக இறந்துள்ளதாக எங்களுக்குத் தோன்றவில்லை’ என்று கூறியுள்ளார்.

அதே நேரத்தில் மகிபால் சிங்கின் மகன், ‘தடுப்பூசி போடுவதற்கு முன்னரே என் தந்தையின் உடல் நிலை சற்று குறைபாடுகள் உடன் தான் இருந்தது. ஆனால் தடுப்பூசி போட்ட பின்னர் அவர் அதிக உடல் உபாதைகளை அனுபவித்தார்’ என்று அதிர்ச்சிகர தகவலைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி போட்ட நிறைய பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கொரோனா தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில் பயன்பாட்டுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ள இரண்டு தடுப்பூசிகளில் கோவாக்ஸின் என்கிற தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் கிளப்பப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் தடுப்பூசி போட்டதால் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என்கிற செய்தி மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Trending

Exit mobile version