தமிழ்நாடு

தமிழகத்தில் தடையின்றி பால் விநியோகம்: அமைச்சர் நாசர் அறிவிப்பு!

Published

on

பால் கொள்முதல் விலையினை உயர்த்தக் கோரி, தமிழ்நாடு முழுவதிலும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் பால் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் இருந்தது. இருப்பினும், தமிழ்நாட்டில் பால் விநியோகம் எந்தவித தடையுமின்றி நடைபெறுகிறது என பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

பால் கொள்முதல் விலை

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர்கள் தமிழக அரசிடம் வலியுறுத்தி வந்தனர். இந்தப் பிரச்சனை தொடர்பாக சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இருப்பினும் இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால், தோல்வியிலேயே முடிந்தது. இதன் காரணமாக பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட வேண்டி தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம்

ஈரோடு மாவட்டம் இராயபாளையத்தில் சாலையில் மாடுகளை நிறுத்தியும், பாலை கீழே ஊற்றியும் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே, பால் கொள்முதலில் எந்தவிதப் பிரச்சனையும் இல்லை என்றும், வழக்கம் போல் பால் கொள்முதல் நடைபெற்றதாகவும் ஆவின் நிர்வாகம் அறிவித்தது. ஒரு சில பால் உற்பத்தியாளர் சங்கங்களைத் தவிர, மற்ற சங்கங்கள் வழக்கமான அளவிற்கு பால் விநியோகம் செய்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் நாசர் பால் உற்பத்தியாளர்களின் போராட்டம் குறித்து பேசுகையில், தமிழகத்தில் மொத்தம் உள்ள 9,354 சங்கங்களில் ஒரேயொரு சங்கம் மட்டுமே போராட்டத்தை அறிவித்துள்ளது என தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஒரு இடத்தை தவிர்த்து, வேறெங்கும் பால் நிறுத்தம் இல்லை என்றும், தமிழ்நாட்டில் தங்கு தடையின்றி பால் விநியோகம் நடைபெற்று வருவதாகவும், எந்த சூழலையும் சந்திப்பதற்கு தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது என்றும் கூறினார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version